"என்ன Mr.மோடி ஒரு பயம் தெரியுதே" உள்ளே நுழைந்ததும் சுடசுட எதிரடி... ஒவ்வொரு நாளும் ஒரு வெடி.. நெருக்கடி
கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாகிதீனிலும் கூட இந்தியா இருக்கிறது என இந்தியா கூட்டணியை பிரதமர் மோடி வசைபாடிய நிலையில், எதிர்க்கட்சிகளும் பதிலடியை கொடுத்திருப்பதால் டெல்லி அரசியலில் பரபரப்பு நிலவுகிறது
மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. இதனால் நாடாளுமன்றம் அமளியால் முடங்கும் சூழலும் நிலவுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணி என அணி திரண்டு நிற்கும் கட்சிகள் ஒன்றாக பாஜகவை கார்னர் செய்கிறது.
எதிர்க்கட்சிகள் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர திட்டமிடுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதுபோன்ற திக்கற்ற எதிர்க்கட்சியினரைப் பார்த்தது இல்லை என குறிப்பிட்ட பிரதமர் மோடி, கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்றவற்றிலும் கூட இந்தியா என்ற பெயர் உள்ளதே என விமர்சனம் செய்தார்.
நாட்டின் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு மக்களை தவறாக வழிநடத்த முடியாது என்ற பிரதமர் மோடி, வரும் 2024 தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெறும் என்றார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடியை கொடுத்தார். இப்போது மணிப்பூர் பற்றி எரிகிறது எனக் குறிப்பிட்ட கார்கே, மணிப்பூர் குறித்து பேச சொன்னால், பிரதமர் மோடியோ கிழக்கிந்திய கம்பெனி பற்றி பேசுகிறார் என விமர்சித்தார்.
எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கண்டு பிரதமர் மோடிக்கு பயம் ஏற்பட்டுள்ளது, அதனாலேயே கிழக்கிந்தியா கம்பெனி... இந்தியன் முஜாகீதின் பற்றியெல்லாம் பேச தொடங்கிவிட்டார் என காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் வீடியோவில் பேசும் கார்கே, பிரதமர் மோடியே திக்கற்றவராக உள்ளார் என விமர்சனம் செய்துள்ளார்.
அதே வேளையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் ட்விட்டரில் பதிலடியை கொடுத்தார்... தங்களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் மிஸ்டர் மோடி எனக் குறிப்பிட்டு, மணிப்பூர் பெண்கள், குழந்தைகளின் கண்ணீரை துடைப்போம்; மணிப்பூர் மக்களுக்கும் அன்பையும், சமாதானத்தையும் மீட்டுக் கொடுப்போம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூட்டணியை பயங்கரவாத இயக்கத்துடன் ஒப்பிட்டு, மணிப்பூர் விவகாரத்திலிருந்து நாட்டை திசைத்திருப்ப பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசாமல் தப்ப முடியாது எனவும் திரிணாமுல் காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது. நமது நாட்டின் பெயரை பயங்கரவாத அமைப்புகளுடன் பிரதமர் ஒப்பிட்டு பேசுவது வருந்தத்தக்கது என சிவசேனா சாடியிருக்கிறது. பயங்கரவாத இயக்க பெயர்களுடன் இந்தியா கூட்டணியை பிரதமர் மோடி ஒப்பிட்டது எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதால் டெல்லி அரசியல் மேலும் பரபரப்பாகியிருக்கிறது.