"உங்களுக்கு தின்பண்டம் கிடையாது போங்க.." "சரின்னு ஸ்கூல் போனால்...அங்கேயும்.." சிறுவனின் வார்த்தையில் தெறிக்கும் வலி - நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
தென்காசி அருகே உள்ள கிராமத்தில் கடையில் மிட்டாய் வாங்க சென்ற சிறுவர்களுக்கு சாதி தன் கோர முகத்தை காட்டியிருப்பது பலரையும் உலுக்கியிருக்கிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் என்ற கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் ஒரு வீடியோ வாயிலாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
ஆசை ஆசையாக கடைக்கு தின்பண்டம் வாங்கி சாப்பிட சென்றவர்களுக்கு ஊர் கட்டுப்பாடு, சாதி என்பதெல்லாம் இந்த வயதில் தெரிந்திருக்க கூடாது தான்.
எதிர் தரப்பில் இருப்பவர் முகத்தில் அடித்தாற் போல சொன்ன போதும் கட்டுப்பாடுன்னா என்ன? என்ற கேள்வியை வெள்ளந்தியாக கேட்ட சிறுவனின் உள்ளத்தை சுக்கு நூறாக்கி போட்டது சாதி தானே?
ஊரில் பல ஆண்டுகளாக சாதியால் மக்கள் பிளவு பட்டு கிடந்த போதிலும் இந்த ஒரு வீடியோ அதை வெளிச்சம் போட்டு காட்டி தீண்டாமையின் வலியையும் புரிய வைத்திருக்கிறது.
பாஞ்சாங்குளம் கிராமத்தில் இரு சமூகத்திற்கிடையே உள்ள பிரச்சினை தண்ணீர் பிடிப்பதிலும், உடலை அடக்கம் செய்வதிலும் இருந்திருக்கிறது. ஆனாலும் அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு தான் கிட்டத்தட்ட 10 குடும்பங்கள் இத்தனை நாட்களாக வாழ்க்கையை கடத்தி வந்திருக்கிறார்கள்.