குழந்தை பெயரை எழுதி மனைவி மரணம் -மனைவி பெயரை எழுதி கணவன் மரணம்..-போராடி ஜெயித்த காதலை வென்ற விதி
- கல்குவாரியில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவரையும், பட்டதாரியான இளம் பெண்ணையும் சேர்த்து வைத்திருக்கிறது சமூக வலைதள காதல்...
- கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் காதலில் இருந்து பின்வாங்காத இருவரின் மன உறுதியை.... அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு ஏற்பட்ட நோய் சீர்குலைத்ததில், குடும்பமே அழிந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது...
- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த இந்திராபுரி கிராமத்தை சேர்ந்தவர் ஜலபதி...
- கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல்குவாரியில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவருக்கு, அபிசல்மியா என்ற பெண்ணுடன் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட, நாளடைவில் நெருக்கம் அதிகமாகி ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்துள்ளனர்...
- ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ளும் நிலைக்கு இருவரும் வந்த போது, இரு வீட்டாரிடமும் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது...
- காதலுக்காக குடும்பத்தை துறக்கவும் துணிந்த ஜோடி, வீட்டை விட்டு வெளியேறி, கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்ட நிலையில், போச்சம்பள்ளி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்...
- இருவரும் தங்களுக்கான துணையை தானே தேர்ந்தெடுக்கும் வயதை எட்டியதால், திருமணம் செல்லுபடியாகும் என போலீசார் தெரிவித்த நிலையில், ஜலபதியின் கிராமமான இந்திராபுரியில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி சந்தோசமாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்...
- இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தம்பதிக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது...
- மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த தம்பதிக்கு, பிறந்த சில நாட்களிலே குழந்தையின் வடிவில் விதி கொடுத்த பேரதிர்ச்சி குடும்பத்தையே சிதைக்கும் அளவுக்கு சென்றது....
- குழந்தைக்கு இதய கோளாறு ஏற்பட, சோகத்தில் துவண்டு போன தம்பதி இருவரும், குழந்தையை பல மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், சிகிச்சைகளும் பயனற்று போக கண் முன்னே இளம் பிஞ்சு உயிரிழந்தது இருவரின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக பதிந்திருக்கிறது...
- குழந்தை மறைவுக்கு பிறகு, வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்த அபிசல்மியா, கடந்த 6 ஆம் தேதி திடீரென கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.....
- கடிதத்தில் வார்த்தைக்கு வார்த்தை குழந்தை இறந்ததால் அடைந்த வேதனையை கொட்டி தீர்த்த அவர்... தன் குழந்தையை புதைத்த இடத்திலே தன்னை புதைத்துவிட கோரி குறிப்பிட்டிருந்த நிலையில், தன் காதல் கணவனை பற்றி சிறுதும் குறிப்பிடமால் முழுக்க முழுக்க தனது குடும்பத்தினருக்கு மட்டும் ஆறுதல் சொல்லி கடிதத்தில் எழுதியிருந்தார்....
- இதையடுத்து, அபிசல்மியாவின் உடலை போலீசாரின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், சடலத்தை கடைசி வரையில் ஜலபதியின் கண்ணில் பெண் வீட்டார் காட்டவில்லை என கூறப்படுகிறது...
- ஏற்கனவே, மகளையும், மனைவியையும் இழந்த சோகத்தில் இருந்த ஜலபதியை, இந்த சம்பவம் பெரிதும் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது...
- இந்நிலையில், மனைவியை போலவே ஜலபதியும் கடிதம் எழுதிவைத்து விட்டு அவர் உடுத்தியிருந்த சேலையிலே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கிராமத்தையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது...
- கடிதத்தில், மகளும், மனைவியும் சென்ற இடத்திற்கு சென்று, அங்கு அவர்களுடன் நிம்மதியாக வாழப்போவதாக அவர் குறிப்பிட்டிருந்தது அனைவரையும் கலங்கடித்தது....
- இந்த பெருந்துயர சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், அபிசல்மியா எழுதிய கடித்தில் கடுகளவு கூட அவர் கணவனை பற்றி பேசாதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.....
Next Story