மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் திடீர் ட்விஸ்ட் - தீவிர கண்காணிப்பில் எல்லை பகுதி
டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வரும் நிலையில், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது..பாலியல் புகார் விவகாரத்தில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 12வது நாளாக இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் என பல தரப்பினரும் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமானோர், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க டெல்லிக்கு வரவுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்லி செல்லும் சாலைகளில் பல்வேறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு படுக்கைகளை வழங்க ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் முயன்றனர். காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சற்று பதற்றமான சூழல் நிலவியது. இதனால் மல்யுத்த வீரர்கள் உடன் காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், மல்யுத்த வீரர்கள் உடனான டெல்லி காவல்துறையின் மோதல் வேதனை அளிக்க கூடியது, அபாயகரமானது என தெரிவித்துள்ளார். பாஜகவை வேரோடு பிடுங்கி விரட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.