"வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்.." - இந்தியாவிற்குள் மீண்டும் நுழைந்தது பப்ஜி...! - "இப்ப அப்படியே வேற மாதிரி..."
இந்தியாவுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பப்ஜி மீண்டும் வருகிறது.. இதில் என்னென்ன மாற்றங்கள் இருக்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்...
டேய் அங்க பாருடா... டேய் சுடுடா... அவன சுடுடா என வன்மம் தெறிக்க சிறார்கள் பப்ஜியில் மூழ்கிக்கிடந்த காலம் அது...
கனரக துப்பாக்கிகள்... போரில் காக்கக்கூடிய கருவிகளை கையாளல்... என விளையாட்டை தொடங்கிவிட்டால் மொபைலே கீழே வைக்கவே முடியாத அளவிற்கு திரில் அனுபவத்தை கொடுக்கும்...
அதில் துப்பாக்கி சூடு... தெறிக்கும் ரத்தம் என பார்த்து வளரும் இளம் தலைமுறை வன்முறை பாதைக்கு செல்லும் என நீதிமன்றங்களின் படியேறினார்கள் பல ஆர்வலர்கள்..
மறுபுறம் பப்ஜி விளையாட அனுமதிக்காத பெற்றோரை குழந்தைகளே கொல்லும் கோரச் செய்தியும், விளையாட முடியாத சிறார்கள் தற்கொலை செய்துக்கொண்ட செய்தியும் அதிரச் செய்தது.
உத்தரபிரதேசத்தில் பப்ஜி விளையாட விடாத தாயை மகனே சுட்டுக் கொன்ற செய்தியெல்லாம் அதி பயங்கரம்..
பப்ஜிக்கு எதிர்ப்பு தொடர இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக 2020 செப்டம்பரில் டிக்டாக், பப்ஜி உள்பட 224 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. சீனாவுடன் இருக்கும் தொடர்பு காரணமாக செயலி தடை செய்யப்பட்டது.
பிறகு இந்தியாவுக்காக பப்ஜி போன்ற BGMI விளையாட்டை அறிமுகம் செய்தது தென் கொரியாவின் கிராப்டன் நிறுவனம்.
இதையும் அடித்து பிடித்து தரவிறக்கம் செய்தார்கள் இந்திய இளசுகள்... இதற்கும் கடந்த ஜூலையில் மத்திய அரசு தடை விதித்தது. செயலியை ஆப்பிள், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்குவதற்கு முன்பாக 10 கோடிக்கும் அதிகமானோர் செயலியை தரவிறக்கம் செய்திருந்தார்கள்.
இப்படி கேம் விளையாட்டில் வர்த்தக மையமாக பார்க்கப்படும் இந்தியாவிலிருந்து வெளிச்செல்ல விரும்பாத கிராப்டன், சீன சர்வர் தொடர்பு இல்லாமல் இந்தியாவுக்கு என பிரத்யேகமாக பப்ஜி செயலியை வடிவமைத்தது.
இதனை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. இதனையடுத்து 3 மாதங்கள் சோதனை அடிப்படையில் செயலியை இந்தியாவில் தரவிறக்கம் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. பப்ஜி விளையாட்டு நடைமுறையை மத்திய அரசு கண்காணிக்கும் என மத்திய கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.
ஆனால் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட பப்ஜி செயலிக்கு இந்தியாவில் தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த பப்ஜி செயலி வன்முறையை தூண்டுவதாகவும், இளைஞர்களை அடிமைப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழலில் இப்போது இந்தியாவுக்கு வரும் செயலியில் ரத்தம் இருக்காது எனவும் இளைஞர்கள் விளையாட ஒரு நாளைக்கு இவ்வளவு மணி நேரம்தான் என்ற கட்டுப்பாடு இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.