ஜில் காற்று.. சாரல் மழை... குற்றாலத்தில் சூப்பர் சீசன் - அருவி மட்டுமல்ல.. அடியோடு மாறிய வானிலை

x

குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்து வருகின்றனர். குற்றாலத்தில் நிலவும் தற்போதைய சீசன் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு..

அருவி என்ற பெயரை சொன்னவுடன், முதலில் நம் நினைவுக்கு வருவது குற்றாலம் தான்... இயற்கை எழில் கொஞ்சும் குற்றாலத்தில், சுற்றுலா பயணிகள் ஜாலியாக குளியல் போட மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவி, செண்பகா தேவி அருவி, புலி அருவி உள்பட அருவிகள் ஏராளம்..

வழக்கமாக, குற்றாலத்தில் ஜூன் மாதம் தொடங்கும் சீசன் இந்த ஆண்டு சற்று தாமதமாக ஜூலை மாதத்தில் தான் தொடங்கியது.

இந்நிலையில், தற்போது சீசன் களைகட்டியுள்ளதால், குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

விட்டு விட்டு பெய்யும் சாரல் மழை, இடையிடையே அடிக்கும் இதமான வெயில் அத்துடன் வருடிச் செல்லும் குளிர்ந்த காற்று என சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக குற்றால சீசன் அமைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக அருவிகளில் நீர் வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்ததைத் தொடர்ந்து இன்று அதிகாலை சுமார் 3 மணிக்கு அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

பின்னர் நீர் வரத்து குறைந்ததை தொடர்ந்து காலை 6 மணி முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.

அருவிகளில் அதிகமாக தண்ணீர் வருவதால் அவர்கள் அணிந்திருக்கும் நகைகள் மற்றும் தங்கச்சங்கிலிகள் அறுபட்டு வெள்ளத்தில் அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது.

எனவே, அருவிகளுக்கு குளிக்க வருபவர்கள், விலை உயர்ந்த தங்க நகைகளை அணிய வேண்டாம் என்றும் அவ்வாறு அணிந்தால் அதனைப் பிடித்துக் கொண்டு அருவியில் குளிக்க வேண்டும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வார இறுதி நாட்கள், விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுவது வழக்கம், ஆனால் சமீப காலமாக வார நாட்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வாரம் முழுவதும் குற்றாலத்தில் கூட்டம் களைகட்டுகிறது.

இந்நிலையில் குற்றாலம் வரும் பயணிகளை குஷிப்படுத்தும் விதமாக, மீண்டும் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. படகு குழாமில் இருந்து மொத்தம் 31 படகுகள் இயக்கப்படுகின்றன. குளு குளு சாரல் மழையில் நனைந்தபடியே படகில் சவாரி செய்வது ஆனந்த அனுபவம் தருவதால், படகு சவாரிக்கும் பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்