கோயம்பேடுக்கு GOOD BYE சொல்லுமா கிளாம்பாக்கம் புது பஸ் ஸ்டாண்ட்?- உலகையே மிரள வைக்க போகும் சென்னை..!
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை, கோயம்பேடு பேருந்துநிலையத்தால் நகருக்குள் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒருங்கிணைந்த பேருந்துநிலையம் அமைக்கப்படுகிறது. வெளியூர்களுக்கான அரசுப் பேருந்துகள், மாநகரப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகளுக்கென தனித்தனியான பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாநகரப் பேருந்துகளைப் பொறுத்தவரை, ஒரே நேரத்தில் 65 பேருந்துகள் நிற்கக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நீண்ட தொலைவுப் பேருந்துகளின் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் ஓய்வெடுக்கக்கூடிய வகையில், 144 பேருந்துகள்வரை பார்க்கிங்கில் நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தவிர, 324 கார்கள் 2,769 இருசக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய இடமும் அமைக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் மையங்கள், பயணச்சீட்டு முன்பதிவு மையம், கழிவுநீர் அகற்று நிலையம் என பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
8 லிஃப்ட்டுகளும் 2 தானியங்கி நடைபாதைகளும் ஆண், பெண் பயணிகள் தங்கும் அறைகளும், அவசரச் சிகிச்சை மையமும், மருந்தகங்களும், பெண்களுக்கு பால் ஊட்டும் அறையும் அமைக்கப்படுகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தை பொங்கலுக்குள் திறக்கவேண்டும் என்பதற்காக, 700க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு பகலாக மும்முரமாக வேலை செய்து வருகின்றனர்.