தமிழிசை, எல்.முருகன், அண்ணாமலை...இவர்களில் யார் அடுத்த பிரதமர்? - யாரை டிக் அடிப்பார் அமித்ஷா?

x

தமிழகத்திலிருந்து ஒருவர் கூட இதுவரை பிரதமரானது இல்லை. பிரதமர் நாற்காலி என்பது தமிழருக்கு எட்டாக்கனி யாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தான்.. தமிழகம் வருகை தந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா... தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என கூறியதோடு, இதற்கு முன்பு இரு முறை தமிழர் பிரதமராகுவதை திமுக தடுத்ததாக குற்றம் சாட்டினார்.அமித்ஷாவின் இந்த பேச்சு, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில், இதற்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள், திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர். தமிழரை பிரதமர் ஆக்குவதாக கூறுவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்... இதன் மூலம் அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி மீது என்ன கோபம் ? என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.

அதோடு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழிசை சௌந்தரராஜன் அல்லது எல்.முருகன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தனது கணிப்பையும் தெரிவித்துள்ளார். காமராஜர் ஒருநாளும் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டது இல்லை என்றும்...தமிழர் பிரதமராக வேண்டும் என்றால் அண்ணாமலையையும், எல். முருகனையும் பிரதமர் நாற்காலியில் அமர வைப்பீர்களா ? என்று கேள்வி எழுப்பி உள்ள தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி... பாஜக நினைத்தால் அதை நாளைக்கு கூட செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். அதே போல் மூப்பனார் என்றாவது தன்னை பிரதமர் ஆக்குவதை சிலர் தடுத்து விட்டனர் என்று கூறி இருக்கிறாரா ? என கேள்வி எழுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கடந்த கால வரலாற்றை பேசுவதற்கு அமித்ஷாவிற்கு என்ன தகுதி உள்ளது என கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்னொரு புறம்... இல.கணேசனை ஆளுநர் ஆக்கியதற்கு அவரை பிரதமராக்கி இருக்கலாமே என்றும் திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இப்படி தமிழரை பிரதமராக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் கூறியது, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருப்பதோடு... பிரதமர் பதவிக்கு பல பரிந்துரைகளையும் பாஜகவிற்கு கொடுத்து வருகிறது. ஏற்கனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், ராமேஸ்வரத்தில் இருந்து போட்டியிட பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், ஒருவேளை பிரதமர் நரேந்திர மோடி , தமிழகத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது என்ற பேச்சு தற்போது மீண்டும் எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்