அழகிய தோற்றத்தில் மயங்கிய பெண்கள் யார் அந்த மர்ம மன்மதன்? - பெண் போல பேசி வலை விரித்த போலீஸ்
அழகிய தோற்றத்தில் மயங்கிய பெண்கள் யார் அந்த மர்ம மன்மதன்? - பெண் போல பேசி வலை விரித்த போலீஸ்
ஆன்-லைன் செயலி மூலம் பெண்களிடம் நெருங்கிப் பழகி, அவர்களிடம் பணம் பறித்த நபரை கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
ஆன்-லைன் இணையதள செயலியை பயன்படுத்தி, தன்னை அழகிய ஆணாக சித்தரித்து, பெண்களை தொடர்பு கொண்டுள்ளார் ஒரு மர்மநபர்.
அந்த செயலியில் அந்த நபரின் தோற்றத்தைக் கண்டு மயங்கிய பெண்களில் சிலர், அவருடன் அந்த செயலி மூலமாகவே பேசியது மட்டுமல்லாமல், புகைப்படம், வீடியோ என தங்களது தனிப்பட்ட தகவல்களை கொடுத்துள்ளனர்.
அந்த நபரிடம் ஆன்-லைன் மூலம் அளிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும், நமக்கே ஆபத்தாக திரும்பும் என்பதை அந்தப் பெண்கள் எதிர்பார்க்கவில்லை. கேட்ட பணம் தரவில்லை என்றால், புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்போவதாக அந்த நபர் மிரட்டல் விடுக்க, சில பெண்கள் பணத்தையும் கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர், பொறுத்தது போதும் என நினைத்து, கோவை போலீசாரிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர்.
ஆன்-லைன் மோசடி என்பதால், இதுகுறித்த விசாரணையை மேற்கொள்ளத் தொடங்கினர் சைபர் கிரைம் போலீசார். பெண்களை தொடர்புகொள்ளும் மர்மமான நபர் யார் என்பது குறித்து, அந்த நபரின் வழியிலேயே செல்ல திட்டமிட்டனர் போலீசார்.
இதன்படி, அந்த செயலியில் அந்த நபரை தொடர்புகொண்ட போலீசார், பெண் பேசுவது போல் நாடகமாடி, அந்த நபரின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் இருப்பிடத்தைக் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து இருப்பிடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த நபரைக் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா கூம்பப்பட்டி பகுதியை சேர்ந்த பரமசிவம் என தெரியவந்தது. பொறியியல் பட்டதாரியான இவர், இணையதள வாயிலாக பல்வேறு பெண்களை ஏமாற்றியது விசாரணையில் கண்டறியப்பட்டது.
பெண் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது உட்பட 8 பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பரமசிவம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது இருக்கும் காலகட்டத்தில், பல்வேறு தரப்பினரும் ஆன்-லைன் மோசடி சம்பவங்களை சந்தித்து வரும் நிலையில், இதுபோன்ற நூதன பேர்வழிகளிடம் உஷாராக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது இந்த சம்பவம்.