"வெள்ளை பேண்ட், சர்ட்..குள்ள மனிதர்" வாடகை வீட்டில் இருப்பவர்களே உஷார்.. இந்த மோசடிக்கு பலி ஆகிவிடாதீர்கள்

x

தமிழக மின்சாரத்துறையின் மின் மீட்டரை, போலி மின்சார வாரிய ஊழியர் விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோசடியில் எத்தனையோ மோசடிகள் உள்ளன.ஆனால் அரசு மின்சாரவாரியத்தை பயன்படுத்தி இப்படி ஒரு மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் ஒரு மர்ம நபர்....


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் கார்த்திகை வீதியில் சாத்தூரப்பன் என்பவரின் மகன் தனசேகரனுக்கு சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளன.

இதில் ஒரு வீட்டில் , அழகுராதாகிருஷ்ணன் - குணசுந்தரி தம்பதியினர் வாடகைக்கு குடி இருந்து வருகின்றனர். மற்றொரு வீட்டில் மின் வயர்கள் பொருத்தும் பணியும் நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில் திங்கள்கிழமையன்று, வெள்ளை நிற பேண்ட் சர்ட் அணிந்த குள்ளமான ஒருவர், எட்டையபுரம் மின்வாரியத்திலிருந்து வருவதாக, அங்கிருந்த குணசுந்தரியிடம் கூறி இருக்கிறார். சாத்தூரப்பன் தனது பெயருக்கு புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பம் செய்துள்ளார் எனவும், அதற்கு புதிய மின்அளவி மீட்டர் வந்துள்ளது என்றும் கூறியுள்ளார். பின்னர் கையில் கொண்டுவந்த ஒரு மின்அளவி மீட்டரை கொடுத்து விட்டு கட்டணமாக 5100 தேவை என கேட்டுள்ளார்.

இதனையடுத்து மதுரையில் வசித்து வரும் வீட்டு உரிமையாளர் தனசேகரன் தாயார் ரத்தினம்மாளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரது அனுமதியோடு, அந்த போலி மின்வாரிய ஊழியரிடம் 5500 ரூபாய் கொடுத்துள்ளார். 5100 போக மீதமுள்ள பணத்தை சில்லறை மாற்றி தருகிறேன் என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து நைசாக நழுவி இருக்கிறார். அவர் நீண்ட நேரம் திரும்பி வராததால், குணசுந்தரி, எட்டையபுரம் மின்அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அலுவலகத்தில் இருந்து புதிய மின் மீட்டர் மாற்ற யாரையும் அனுப்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து போலி மின் ஊழியரிடம் தான் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டது குணசுந்தரிக்கு தெரிந்தது.

இப்பிரச்சினை குறித்து எட்டையபுரம் மின்வாரிய அலுவலகம் மற்றும் எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இதனிடையே, அந்த மர்ம நபர் கொடுத்த மின் மீட்டர் தமிழக மின்சாரத்துறை வழங்க கூடிய மீட்டர் என்றும், ஆனால் அது நெல்லை மண்டலத்தில் பொருத்தப்படும் மீட்டர் கிடையாது என்றும், வேறு மண்டலத்தில் உள்ள மீட்டர் என்று மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

என்னதான் மின்வாரியம் விளக்கம் கொடுத்தாலும், மக்கள் ஏமாற்றப்படமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது வாரியத்தின் கடமை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்..


Next Story

மேலும் செய்திகள்