"கோயில் எங்க இடத்தில் இருக்கு.." பட்டியலினத்தவரை உள்ளே விட மறுப்பு..திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல்

x

பட்டியலின மக்களை கோயிலுக்குள் சென்று வழிபட மாற்று சமூகத்தினர் அனுமதி மறுத்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளை கோவிலை பூட்டி சீல் வைத்தனர்...கோவில் விவகாரத்தில் என்னதான் நடக்கிறது என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

சமூகநீதியின் பூமி என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் தமிழகத்தில், அவ்வப்போது அரங்கேறும் வன்மம் நிறைந்த சாதிய ஆணவ செயல்கள் ஒட்டுமொத்த மக்களையும் தலைகுனிய செய்துவிடுகின்றன.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் பழமையான திரௌபதி அம்மன் கோவிலை முன்வைத்து, சமூகநீதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மற்றுமொரு சம்பவம் அரங்கேறி,உச்சகட்டத்தை எட்டியுள்ளது....

மேல்பாதி கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யும் உரிமை பல்லாண்டு காலமாக மறுக்கப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், அப்பகுதியில் இருக்கும் பட்டியலினத்தை சேர்ந்த சிலர் கோயிலுக்குள் வழிபாடு நடத்தச் சென்றுள்ளனர். இதை பார்த்த மாற்று சமூகத்தை சேர்ந்த சிலர், பட்டியலின மக்களை தடுத்து, அவர்கள் மீது தாக்குதலும் நடத்தியதாக கூறப்படுகின்றது...

ஒடுக்குமுறைக்கு எதிராக அதிர்ச்சியடைந்த பட்டியலின மக்கள், சாலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு சமூகத்தினருக்கு இடையே பிரச்னை முற்றிய நிலையில் பேச்சு வார்த்தை தொடங்கியது....

இனி நாங்கள் கோயிலுக்குள் சென்றுதான் வழிபாடு நடத்துவோம் என பட்டியலின மக்கள் உறுதிகாட்ட,

மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் அதற்கு நாங்கள் அனுமதி தரமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தனர்....

மாவட்ட ஆட்சியர் தரப்பில் மூன்று முறையும், வருவாய் கோட்டாட்சியர் தரப்பில் ஐந்து முறையும் என 8 முறை

பேச்சு வார்த்தை நடந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மாற்று சமூகத்தினர் கோயில் எங்கள் நிலத்தில் உள்ளது, அதனால் அவர்களை அனுமதிக்க முடியாது என கூறினர்...."இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றது"வழிபாடு நடத்த எங்களுக்கு உரிமை இருக்கிறது என பட்டியலின மக்கள் தரப்பில் தெரிவித்தனர்.

இதற்கிடையில் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க கூடாது என்று, மேல்பாதி கிராமத்தை சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

மாற்று சமூகத்தினர் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுபட்டியலின மக்களுக்கு எதிரான முடிவு என உணர்ந்த வருவாய் கோட்டாட்சியர் கோவிலுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கோயிலை பூட்டி சீல் வைத்தனர்.

மேல்பாதி கிராமத்தில் இரண்டு சமூக மக்களும் அதிக அளவில் வசித்து வரும் நிலையில் பதற்றமான நிலை நீடித்து வருகிறது. 2000-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, தடுப்புகள் அமைத்து தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலம் காலமாக சமூகநீதியை பேசினாலும், இது போன்ற சம்பவங்கள் சமூகநீதியை இன்னும் வலிமையாக முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதை உணர்த்துகின்றன.


Next Story

மேலும் செய்திகள்