புழல் சிறையில் செந்தில் பாலாஜிக்கு என்னென்ன வசதிகள்..? 'வடசென்னை' பட பாணியில் குளியல் அறை

x

புழல் சிறையின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

சமீபமாக தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதும் ஒன்று. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அவரை அமலாக்கத்துரையினர் கைது செய்தனர். இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்பு செந்தில் பாலாஜியை கடந்த திங்கட்கிழமை காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.

சிறையில் செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொண்டவரை சிறையில் அடைத்தால் நோய் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக கூறி புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தொடர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார் செந்தில்பாலாஜி.

செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் சிறை மருத்துவமனையில் 60 க்கும் மேற்பட்ட கைதிகள் சிகிச்சை பெறும் வகையில் படுக்கைகள் உள்ளன... இதே மருத்துவமனையில் தனி அறை ஒன்றும் உள்ளது. அந்த அறையில் மூன்று பேர் சிகிச்சை பெறலாம்... இந்த அறையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவரின் அறிவுரைப்படியே அவருக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்கின்றனர் சிறைத்துறையினர்.

இந்த மருத்துவமனையில் ஷிப்ட் முறையில் மூன்று பொது மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் ஒரு நாள் செவ்வாய்க்கிழமை சிறப்பு மருத்துவர்கள் சிறைக்கு வந்து சிகிச்சை மேற்கொள்ளுவார்கள் என்கின்றனர் ....அவசர தேவை என்றால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மருத்துவர்கள் வரவழைக்கப்படுவார்களாம்...

மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்ப்பட்டால் கைதிகளை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சிறைத்துறை வார்டுக்கு அழைத்து செல்லப்பட்டு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும் என்கின்றனர் சிறைத்துறை அதிகாரிகள்.

வடசென்னை மற்றும் மகாநதி திரைப்படத்தில் காண்பிப்பது போல சிறையில் கைதிகள் குளிப்பதற்கு தண்ணீர் தொட்டிகள் புழல் சிறையில் உள்ளன. அதில் தான் கைதிகள் துண்டைக் கட்டிக் கொண்டு குளிக்க வேண்டும். தனியாக குளிக்க குளியலறையும் உள்ளது. ஆனால் குளியலறையிலும் தண்ணீர் தொட்டி தான் இருக்கும். குளியல் அறையின் கதவுகள் முழுமையாக மூடப்பட்டு இருக்காது. இடுப்பு வரையிலான பகுதி மட்டுமே மறைக்கப்பட்டு இருக்கும். இது போன்ற ஒரு குளியலறையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி குளிக்க வேண்டும் என்கின்றனர் சிறைத்துறை அதிகாரிகள்..

இதே போல அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடைகளை துவைப்பதற்கு சிறை துறையில் பொதுவான வாஷிங் மெஷின் உள்ளது. அதற்கென தனி ஊழியர்கள் உள்ளார்கள். அவர்கள் செந்தில் பாலாஜியின் உடைகளை பெற்று அதனை துவைத்து கொடுப்பார்கள். இதற்காக அமைச்சர் கட்டணம் செலுத்த வேண்டும் என்கின்றனர் சிறைத்துறை அதிகாரிகள்.

சிறைக்கு வரக்கூடிய ஒவ்வொரு கைதிக்கும் கைதி எண் மற்றும் பிசிபி கணக்கு தொடங்கப்படும் (Prisoner Cash Properties) அதன் படி செந்தில் பாலாஜிக்கு 1440 கைதி எண்ணாக வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த பிசிபி கணக்கில் அதிகபட்சமாக 500 ரூபாய் வரை அவரை பார்க்க வரும் உறவினர்கள் செலுத்திக் கொள்ளலாம். இந்த 500 ரூபாய் மூலமாக துணிகள் துவைப்பதற்கும், சோப்பு, பேஸ்ட், பிரஷ், ஆடைகள் உள்ளிட்டவை வாங்குவதற்கும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்றனர்.

சிறை மருத்துவமனையில் இருந்து அவர் நன்றாக இருக்கிறார் என மருத்துவர் தெரிவித்தால் அதன் பின்பு அமைச்சர் செந்தில் பாலாஜி வரி கட்டக்கூடிய குடிமகன் என்ற அடிப்படையிலும் எம்பி, எம்எல்ஏ என்ற அடிப்படையிலும் அவருக்கு சிறை துறையில் முதல் வகுப்பு வழங்கப்படும்...


Next Story

மேலும் செய்திகள்