கோயிலுக்கு சென்ற தாய், மகன் பலி, தந்தை கண் முன்னே பிரிந்த உயிர் - ஒரே நொடியில் சிதைந்த குடும்பம்
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே, நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய் மற்றும் மகன் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்தில், சாலையோரத்தில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர் கிராமத்தில் இருந்து சிதம்பரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய, அதிகாலையில் காரில் 4 பேர் சென்று கொண்டிருந்தனர். வண்டுராயன்பட்டு கிராமத்தில் கார் வந்தபோது எதிர்பாராமல், அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் காரில் இருந்த தருண்ராஜ், அவரது தாயார் பரிமளா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பரிமளாவின் கணவர் பழனிவேல், ஓட்டுநர் விக்கி ஆகியோர், உயிருக்கு ஆபத்தான நிலையில், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.