“நாங்க உங்க தூரத்து சொந்தம்...“ வீட்டுக்குள் சரசரவென புகுந்த கும்பல் - திடீர் அலறல் சத்தம் - மிரள விட்ட சம்பவம்
கன்னியாகுமரியில் ஹிஜாப் அணிந்து வீட்டினுள் புகுந்த கும்பல் சினிமா பாணியில் குடும்பத்தை அலற விட்ட நிலையில், சினிமா பாணியிலேயே போலீசிலும் சிக்கியுள்ளனர். இது குறித்து பார்க்கலாம் விரிவாக...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இடலாக்குடி அருகே வேதநகரில் வசித்து வருபவர் உமர்பாபு. வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவர், சில மாதங்களுக்கு முன்புதான் சொந்த ஊர் திரும்பிய நிலையில், அங்கேயே செட்டிலாகியிருக்கிறார்...
இந்நிலையில், கோமாளி திரைப்பட பாணியில் உங்களுடைய தூரத்து உறவினர்கள் என்றும், திருமண அழைப்பிதழ் வைக்க வந்துள்ளதாக கூறி உமர்பாபுவின் வீட்டினுள் கும்பல் நுழைந்துள்ளது...
வீட்டினுள் புகுந்த 7 பேரில் இருவர் மட்டும் ஹிஜாப் அணிருந்திருந்த நிலையில், மறைமுகமாக பொம்மை தூப்பாக்கிகள், ஆயுதங்கள் ஆகியவற்றை கையில் வைத்திருந்துள்ளனர்....
அந்த ஏழு பேரில் இருவர் மட்டும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், தங்களை அடையாளம் கண்டு விடக்கூடாது என்பதற்காக ஹிஜாப் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது...
மனைவி மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றிருப்பதாகவும், நான் மட்டும் தான் வீட்டில் இருப்பதாகவும் கூறிய உமர்பாபுவிடம் நன்றாக பேசிக்கொண்டிருந்த கும்பல் திடீரென பொம்மை துப்பாக்கிகளை காட்டி மிரட்டிய நிலையில், அரிவாளால் தாக்கியுள்ளனர்...
கொண்டு வந்த கயிறால் உமர்பாபுவை கட்டி வைத்த அவர்கள், வீட்டிலிருந்த பொருள்களையெல்லாம் வாரி சுருட்டிக் கொண்டிருந்த நிலையில், திடீர் ட்விஸ்டாக உமர்பாபுவின் மனைவி குழந்தைகளுடன் வீடு திரும்பியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்...
உமர்பாபு மனைவியின் பரபரப்படைந்து கூச்சலிடவே, பதறிப்போன கும்பல் கையில் வைத்திருந்த ஆயுதங்களை வீட்டிலேயே விட்டபடி 6 சவரன் நகைகளோடு தப்பிச்சென்றனர்..
இதில், தாங்கள் வந்திருந்த காரில் வேகவேகமாக கிளம்பிய கும்பல், அவசரமாக காரை எடுத்தபோது அங்கிருந்த சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளாகி போனார்கள்...
இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் நம்மை நெருங்கி கொண்டிருக்கிறார்கள் என்ற படபடப்பில் காரை அந்த இடத்திலேயே விட்டு கும்பல் தப்பியோடியது...
இதில், ஹைலைட் என்னவென்றால்...
திருடியதோ 6 சவரன் நகைகள், ஆனால் அங்கு விட்டு வந்ததோ லட்ச மதிப்பிலான கார்.. ஒரு நியாயம் வேண்டாமா என கும்பல் விரக்தி அடைந்துள்ளது...
இதனால், கும்பலில் ஹிஜாப் அணிந்து வந்த இருவரில் ஒருவர் மட்டும், காரை எடுப்பதற்காக ஹிஜாப்பை கழட்டி வைத்து விட்டு ஒன்றுமறியாதாவர் போல் சம்பவ இடத்தில் மக்களுடன் மக்களாக நின்றுள்ளார்...
இதில், சந்தேகமடைந்த உமர்பாபு மற்றும் அவரது மனைவி அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்... விசாரணையில், அவரின் பெயர் ரஹீம் என்பதும், 35 வயதான அவர், அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது...
ரஹீம் தான் உமார் பாபுவின் வீட்டை நோட்டமிட்டும், கொள்ளைக்கு திட்டமிட்டும் தனது நண்பர்களோடு சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டதும் அம்பலமானது...
ரஹீம் மீது பல வழக்குகள் காவல்நிலையத்தில் நிலுவையில் இருப்பது தெரியவர அவரது நண்பர்களான அமா், கௌரி மற்றும் அஷ்ரஃப், மீரான் மைதீன் என ஆறு பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...
இவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 6 சவரன் நகைகளை மீட்ட போலீசார், பல போலி பதிவெண்கள் கொண்ட நம்பர் பிளேட்டுகளை கைப்பற்றிய நிலையில், தொடர்ந்து இதுபோல் பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார்களா என தீவிர விசாரணை நடத்தி வரும் வேலையில், தலைமறைவான ஒருவரை வலை வீசி தேடியும் வருகின்றனர்....