ATM-ஐ உடைத்து கொள்ளை முயற்சி - எச்சரிக்கை செய்தியால் உஷாரான அதிகாரிகள்

x

அருப்புக்கோட்டை நகரின் பிரதான பகுதியில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில், பாரத ஸ்டேட் வங்கி கிளை அருகே அந்த வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு, மர்ம நபர்கள் சிலர் இந்த ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்து, இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதுகுறித்து, ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து வங்கி அதிகாரிகளின் செல்போனுக்கு எச்சரிக்கை செய்தி சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள், உடனடியாக கால்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்த நிலையில், சுதாரித்து கொண்ட கொள்ளையர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். போலீசார் வந்து பார்த்தபோது, ஏ.டி.எம். இயந்திரம் உடைக்கப்பட்டு கிடந்த‌தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஏடிஎம் மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகரின் பிரதான பகுதியில் அமைந்துள்ள ஏ.டி.எம். மையத்தில் நடந்த கொள்ளை முயற்சி, அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்