தன் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினைகள்.. மேடையில் மறைமுகமாக தாக்கி பேசிய விஜய் - அதிர்ந்த அரங்கம்
"1990களில் எனக்கு ஒரு போட்டியாளர் உருவானார்...அவரோட வெற்றி மேல இருக்குற பயத்துல ஓட ஆரம்பிச்சேன்...அவர தாண்டனும்னு போட்டி போட்டுட்டே இருந்தேன்...அவர் பெயர் தான் ஜோசப் விஜய்"... வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் இதை சொன்னதும் இடி முழக்கம் போல் ஒரு சேர கத்தி உற்சாகம் அடைந்தனர் ரசிகர்கள்...
வெற்றியோ தோல்வியோ...எந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்காத ரசிகர்கள் கிடைத்தது, "நாளைய தீர்ப்பில்" அறிமுகமாகி, திரையுலகின் சிம்மாசனத்தில் அமர்ந்து, திரைத்தாயின் "வாரிசு", தான் தான் என்பதை நிரூபித்துள்ள நடிகர் விஜய்க்கு கிடைத்துள்ள வரம் என்றே சொல்லலாம்...
பொங்கலுக்கு ரிலீசாக உள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டிற்காக சென்னை நேரு உள்விளையாட்டரங்கம் திருவிழாக் கோலம் பூண்டது... வந்தது ரசிகர்கள் படையா...இல்லை கடல் அலையா எனும் அளவுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்களால் அரங்கமே நிரம்பி வழிந்தது...
பட்டாசுகள் வெடித்து...மேள தாளங்கள் முழங்க உலா வந்து விழாவை அதகளப்படுத்தினர் ரசிகர்கள்...
சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில், திருவான்மியூரில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு "தளபதி வாழ்க" என்று முழக்கமிட்டபடியே சென்ற விஜய் ரசிகர்களால் திருவான்மியூர் சாலை விழி பிதுங்கி நின்றது...
இவ்விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், மற்றும் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்...
"என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான ரசிகர்களே" என்ற தாரக மந்திரத்தைக் கேட்க தவமிருந்த ரசிகர்களின் வரத்தை நிறைவேற்றினார் விஜய்...
விழாவில் பேச விஜய் மேடையேறியதும் கைதட்டல்களாலும் விசில்களாலும் திணறிய அரங்கம், ரசிகர்களின் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கியது...
விஜய், தனது புதிய ஸ்டைலில் "ஃப்ளையிங் கிஸ்" கொடுக்க, ரசிகர்கள் முத்த மழையில் நனைந்தனர்...
ரசிகர்களை எப்போதும் 3வது மனிதராக விஜய் கருதியதில்லை... அனைவரையும் தன் அண்ணன் தங்கையாக பாவிக்கும் விஜய், விழாவில் ஒரே ஒரு குட்டி கதை சொல்கிறேன் என்று "அன்பு ஒன்றுதான் உலகத்தை ஜெயிக்கும் ஆயுதம் என்பதை அழகான "அண்ணன், தங்கை" கதை மூலம் அழகாக விளக்கினார்...
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உருவாக்கப்பட்ட "ரத்த தான செயலி" குறித்து பேசிய விஜய், "ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் ரத்தத்தில் மட்டும் தான் இருக்காது" என்பதால் தான் இதை ஆரம்பித்ததாகத் தெரிவித்தார்...
அத்துடன், இந்த ரத்த தானம் ஆப்-ல் 6 ஆயிரம் பேர் இணைந்திருப்பதாகத் தெரிவித்த விஜய், இதற்கு ரசிகர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் காரணம் என புகழாரம் சூட்டினார்...
வாரிசு மட்டுமல்லாமல் விஜயின் ஒவ்வொரு படமும் பல தடைகளைக் கடந்தே ரிலீசாகும் நிலையில், "பிரச்சினைகள் வருகிறது... நம்மை எதிர்க்கிறார்கள் என்றால் சரியான பாதையில் தான் நாம் செல்கிறோம்" என நம்பிக்கையூட்டிய விஜய்,
தேவையான விமர்சனங்களும், தேவையில்லாத எதிர்ப்புகளும் தான் நம்மை வாழ வைக்கும் என அறிவுரை கூறினார்...
"ரஞ்சிதமே" பாடலைப் பாடி அசத்திய விஜயுடன் சேர்ந்து ரசிகர்களும் பாடியதால் அரங்கமே அதிர்ந்தது...
தனது வழக்கமான பாணியில், ரசிகர் பட்டாளத்துடன் மேடையில் நின்றபடி செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய், அதைத் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் நெஞ்சில் குடியிருக்கும்" என்ற கேப்ஷனோடு பதிவிட்டு அசத்தியுள்ளார்... பதிவிட்டு சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ பல லட்சம் பார்வைகளைக் கடந்து பட ரிலீசுக்கு முன்பே புதிய சாதனை படைத்துள்ளது...