விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர்...ஒரே ஓவரில் 7 சிக்சர் - ருதுராஜ் உலக சாதனை
விஜய் ஹசாரே தொடரில் உத்தரப்பிரதேசத்துடனான காலிறுதி ஆட்டத்தில் சதம் கடந்து களத்தில் இருந்தார் மகாராஷ்டிர அணியின் கேப்டன் ருதுராஜ் கெக்ய்வாட்...
49வது ஓவரை சுழற்பந்துவீச்சாளர் சிவா சிங் வீச, ஃபுல் டாஸாக வந்த முதல் பந்தை லாங்-ஆன் திசையில் பறக்கவிட்டார் ருதுராஜ்...
விளாசுவதற்கு ஏதுவாக விழுந்த 2வது பந்தை தலைக்கு மேலே பறக்கவிட்ட ருதுராஜ், 3வது பந்தை டீப்-ஸ்கொயர் லெக் திசைக்கு அனுப்பி அதகளப்படுத்தினார்.
ஹாட்ரிக் சிக்சர்கள் சென்றதால் மிரண்டுபோன சிவா சிங், 4வது பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார். ஆனால் அதையும் அநாயசமாக எல்லைக்கோட்டுக்கு வெளியே ருதுராஜ் அனுப்பினார்.
நோபாலாக வந்த பந்தையும், அதற்கு அடுத்தடுத்த பந்துகளையும் பறக்கவிட்ட கெக்ய்வாட், ஒரே ஓவரில் 7 சிக்சர் அடித்து சரித்திரம் படைத்தார். மட்டுமின்றி தனது ருத்ர தாண்டவத்தால் இரட்டைச் சதத்தையும் ருதுராஜ் ருசித்தார்.
சிவா சிங் வீசிய 49வது ஓவரில் 43 ரன்கள் கிடைத்த நிலையில், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் கெக்ய்வாட் சொந்தக்காரராகி உள்ளார்.
முன்னாள் வீரர்கள் ரவி சாஸ்திரி, கிப்ஸ், யுவராஜ் சிங், பொல்லார்டு உள்ளிட்டோர் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள்தான் அடித்து இருக்கின்றனர். ஆனால் இந்த சாதனைகளை எல்லாம் முறியடித்து, தனி ஒரு நாயகனாக வரலாற்றில் தனக்கான இடத்தைப் பிடித்து இருக்கிறார் இளம் வீரர் ருதுராஜ் கெக்ய்வாட்...