வேங்கைவயல் விவகாரம் -முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்..!
சட்டப்பேரவையில், வேங்கைவயல் விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் குறித்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டதாக கூறினார். அங்கு சேகரிக்கப்பட்ட தடயவியல் விவரங்கள் நீதிமன்ற உத்தரவின்படி சென்னைக்கு அனுப்பப்பட்டதாக கூறிய அவர், தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட கண்காணிப்பாளர்கள் ஆய்வு நடத்தினார்கள் என்றார். சட்டம் ஒழுங்கை பராமரிக்க காவல்துறையினர் சுழற்சி முறையில் அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டதாக கூறிய அவர், ஜனவரி 14 - ம் தேதி இந்த விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த திருமுருகன் சிபிஐ விசாரணை வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியதாகவும், நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதியரசர் சத்ய நாராயணா தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு 2 மாதத்தில் அறிக்கை அளிக்க அரசாணை வெளியிடப்பட்டது என முதலமைச்சர் தெரிவித்தார்.
வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், அப்பகுதியில் தீண்டாமையை ஒழிக்கவும், அனைத்து தரப்பு மக்களிடம் அமைதியை நிலை நாட்டவும் அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு அனைத்து உதவிகளும் செய்ய அரசு தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்