மீண்டும் ஒலிக்கும் சந்தன கடத்தல் மன்னன் பெயர்..குஜராத்தில் சிக்கிய வீரப்பன் கூட்டாளி
தமிழக - கர்நாடக அரசுகளுக்கு பெரும் சவாலாக இருந்து வந்தவர் சந்தனக் கடத்த வீரப்பன். சட்டவிரோதமாக யானை தந்தங்களையும், சந்தன மரங்களையும் கடத்திய வீரப்பன், கடந்த 2004ம் ஆண்டு, தமிழக சிறப்பு அதிரடிப்படையால் என்கவுன்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.அவர் இறந்து 19 ஆண்டுகள் ஆகும் நிலையில், மீண்டும் சந்தன கடத்தல் வீரப்பனின் பெயர் உச்சரிக்கப்படுவதற்கு காரணம், அவரது கூட்டாளியாக இருந்து, தற்போது போலீசிடம் சிக்கிய பிரகாஷ் ஜெயின் என்பவரால் தான்...
கடந்த 1992-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டுவரை சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளியாக செயல்பட்டவர் பிரகாஷ் ஜெயின்.குஜராத் மாநிலம் போடக்தேவ் பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரி போல் காட்டிக் கொண்ட இவர், வன விலங்குகளை வேட்டையாடி அதன் பொருட்களை விற்பனை செய்து வருவதைத் தான், முதன்மை தொழிலாக கொண்டிருந்தார்.கடந்த ஏப்ரல் 9-ந் தேதி, சுமார் 14 கிலோ எடையுள்ள யானை தந்தத்தை வைத்திருந்ததற்காக, அவரை அகமதாபாத் நகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.ஆனால், கைதான ஒரு மாத காலத்திலேயே, பிரகாஷ் ஜெயின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
பின்னர் மீண்டும் புலித்தோல் வைத்திருந்ததாக, பிரகாஷ் ஜெயினை அகமதாபாத் போலீசார் கைது செய்தனர். அவர் மீது வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதுதொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்தன. தமிழ்நாட்டின் திருச்சி வனச்சரக பகுதியில் பிரகாஷ் ஜெயின் வன விலங்குகளை வேட்டையாடியது போலீசாருக்கு தெரியவந்தது.அவரிடம் இருந்து ஒரு புலித்தோல், 2 யானை தந்தம், 2 கொம்புகள் மற்றும் நரியின் வால்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனிடையே, பல்வேறு கடத்தல் வழக்குகளில் தேடப்படும் பிரகாஷ் ஜெயின், அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது, தமிழக போலீசாருக்கு தெரியவந்தது.இதற்காக, அஹ்மதாபாத் கிரைம் காவல்துறையின் உதவியை, தமிழக வனத்துறை குற்றப்பிரிவு காவல்துறையினர் நாடினர். பின்னர் அகமதாபாத் போலீசார் தமிழக வனத்துறையினரிடம் பிரகாஷ் ஜெயினை ஒப்படைத்தனர்.சேலம் மாவட்டத்தில் தங்கி இருந்து வீரப்பனுடன் இணைந்து பணியாற்றிய பிரகாஷ் ஜெயின், 2004ம் ஆண்டு வீரப்பன் மறைவுக்குப் பிறகும், தொடர்ந்து தந்தங்களை கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.