'ரத்தம்.. ரத்தம்..' என அலறியபடி ஓடிவந்த பெண்.. தலைக்குள் இருந்து வந்த விசித்திர திரவம் - அதிர்ந்த டாக்டர்கள்.. பின்னணியில் 'காதல்' போதை
- எந்த ஒரு விசயத்தையும் Plan பண்ணாம பண்ணுன இப்படித்தான் ஆகும்ங்குற மாதிரி, வடிவேல் பட காமெடி காட்சிபோல அரங்கேறியுள்ளது ஒரு சம்பவம்... ஒரு பெண்ணின் அக்கப்போரால் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து போனார்கள் வேடசந்தூர் மருத்துவமனை ஊழியர்கள்...
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் 38 வயதான பெண் சின்னகுஞ்சு. வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்த இவர், தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர்கள், தலையில் பலமாக தாக்கி விட்டார்கள், ரத்தம் கொட்டுகிறது, எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் என அலறியடித்தபடி கூறியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்களும், தலையெங்கும் சிவப்பாக இருக்கவே, ரத்தம் தான் என நினைத்து பதறிப்போய், வேகமாக அந்தப் பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை செய்ய தொடங்கியுள்ளனர்.
- உடனே டிஞ்சர், பஞ்சு என சிகிச்சைக்கு வேகம் காட்டிய போது தான், வந்த பெண் போதையில் இருப்பது தெரியவந்தது.
- ரத்தம் என பதற வைத்த அந்த பெண்ணின் தலையில் இருந்தது அத்தனையும் குங்குமம் தான்... இதுக்குதான் இவ்வளவு பெரிய அக்கப்போரா என மருத்துவமனை ஊழியர்கள் முணுமுணுத்தபடி, தலையில் இருந்து குங்குமத்தை, பஞ்சால் தேய்த்து தேய்த்து எடுத்தது காமெடியாக இருந்தது...
- தலையில் இரத்தம் வடியவில்லை என தெரிந்தும், கடுமையாக வலிக்கிறது காப்பாற்றுங்கள் என தொடர்ந்து அந்தப் பெண் பாசாங்கு காட்டியது மருத்துவமனை ஊழியர்களை கோபத்திற்கு ஆளாக்கியது.
- ரத்தம் இல்லை என மருத்துவர்கள் கூறியும் கேட்காமல் சிகிச்சை அளிக்குமாறு பெண் அடம்பிடித்ததால், மருத்துவமனை ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
- பின்னர் அங்கு வந்த போலீசார், சின்னகுஞ்சுவிடம் விசாரணை நடத்தியபோது தான், அந்த பெண் நடத்தியது நாடகம் என தெரியவந்தது.
- சின்னக்குஞ்சுவும் அவரது காதலன் முருகனும் மது அருந்தி விட்டு அடிக்கடி சண்டையிட்டுள்ளனர். இதனை அக்கம்பக்கத்தினர் தட்டிக் கேட்டதால் அவர்களை பழிவாங்கவே, குங்குமத்தை தலையில் கொட்டிக் கொண்டு அவர்களை சிக்க வைக்க போட்ட பலே நாடகம் தெரியவந்தது.
- அந்த பெண்ணின் செயலை அறிந்த மருத்துவர்கள் தலையில் தையல் போடலாமா? என கேட்கவே, அங்கிருந்து ஓட்டம் பிடித்த சின்னக்குஞ்சுவுக்கு, இந்த நேரம் போதை தெளிந்திருக்குமா? என தெரியவில்லை...
Next Story