இரண்டு ஆண்டுக்கு பின் முடிவுக்கு வந்த சிறை வாசம்? பத்திரிகையாளர் சித்திக் காப்பானுக்கு ஜாமீன்!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 2020 செப்டம்பரில் உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராவைச் சேர்ந்த பெண் கும்பல் வல்லுறவுக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், 15 நாள்களில் இறந்துபோனார்.
இரவோடு இரவாக ஹத்ராவில் அவரின் உடலை தகனம் செய்ததால், நாடளவில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
கேரளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பான், செய்தி சேகரிப்பதற்காக, ஹத்ராவுக்குச் சென்றார்.
அவரை அந்தப் பகுதிக்குள் விடமறுத்த உ.பி. காவல்துறை, அவரைக் கைதுசெய்து, உபா சட்டத்தில் வழக்கு பதிந்தது. சிறையில் அடைக்கப்பட்ட கப்பானுக்கு, கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது.
இதனிடையே, கப்பான் உள்பட ஏழு பேர் மீது பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கும் பதியப்பட்டது. அதில் இன்று லக்னோ உயர்நீதிமன்றம் கப்பானுக்கு பிணை வழங்கியது.உத்தரப்பிரதேசத்தில் இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவரும் கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பானுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.