"இளைஞர்களை அழிக்க குஜராத்திற்குள் நுழையும் 'அர்பன்' நக்சல்கள்" - பிரதமர் மோடி எச்சரிக்கை
குஜராத்திற்குள் புதிய தோற்றத்துடன் நகர்புற நக்சல்கள் நுழைய முயற்சிப்பதாக, ஆம் ஆத்மியை கடுமையாக, பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
டிசம்பரில் தேர்தல் நடைபெற உள்ள குஜராத்தில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில் பரூச் மாவட்டத்தில் நாட்டின் முதல் மருந்து பூங்காவை அமைப்பதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது பேசுகையில், குஜராத் மாநிலத்திற்குள் புதிய தோற்றங்களுடன் நகர்புற நக்சல்கள் நுழைய முயற்சிக்கிறார்கள் என மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க ஆர்வம் காட்டும் ஆம் ஆத்மியை கடுமையாக சாடினார். நகர்புற நக்சல்கள் தங்களின் உடைகளை மாற்றியுள்ளனர், அவர்கள் துடிப்புமிகு குஜராத் இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார்கள் என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். இந்த நாட்டை அழிக்கும் பணியை எடுத்திருக்கும் நகர்புற நக்சல்கள் குறித்து குழந்தைகளுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்ற பிரதமர் மோடி, அந்நிய சக்திகளின் முகவர்களான அவர்களை குஜராத் அழித்துவிடும் என்றும் கூறினார்.