மத்திய இணையமைச்சர் எல். முருகன் இல்லத்தில் தமிழ் புத்தாண்டு விழா -பிரதமர் மோடி, குடியரசு தலைவர் பங்கேற்பு

x

டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பழம்பெருமை வாய்ந்த உத்திரமேரூர் கல்வெட்டுகள் குறித்து பெருமிதத்துடன் பேசியுள்ளார்.

தமி ழ் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி இரவு 8.15 மணியளவில், டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்திற்கு சென்றார். அவருடன் துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்டோர் வருகை புரிந்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது என்றார். இதற்கான வரலாற்று சான்றுகள் பல உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சுமார் ஆயிரத்து 100 ஆண்டு பழம்பெருமை வாய்ந்த உத்திரமேரூர் கல்வெட்டுகளில் எவ்வாறு சட்டசபை செயல்பட வேண்டும், கிராம சபை எவ்வாறு செயல்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக பெருமையுடன் குறிப்பிட்டார்.

தேர்தல் எவ்வாறு நடத்தப்பட வேண்டும், ஒரு உறுப்பினரின் தகுதி என்ன, எவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து உத்திரமேரூர் கல்வெட்டுகளில் விவரங்கள் உள்ளதாக வியந்து கூறினார். உலகின் பழமையான மொழி தமிழ் என்றும், ஒவ்​வொரு இந்தியனும் பெருமைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் மலர்கொத்துக்களை கொடுத்தும், நினைவு பரிசு வழங்கியும் உற்சாகமாக வரவேற்றனர்.



Next Story

மேலும் செய்திகள்