மரண பயம் காட்டிய மார்க் சக்கர்பெர்க்.. தூக்கத்தை தொலைத்து கதறும் மஸ்க் - Threads-க்கு ட்விட்டரின் கடைசி எச்சரிக்கை

x

ட்விட்டரை போன்ற வடிவம் கொண்ட Threads செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மெட்டா நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப் போவதாக ட்விட்டர் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

தொடர் நஷ்டத்தில் இயங்கி வரும் ட்விட்டர் நிறுவனத்தை 2022 அக்டோபரில் 4,400 கோடி டாலருக்கு வாங்கிய எலான் மஸ்க், அதை சீர் செய்ய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

இந்நிலையில், டிவிட்டருக்கு போட்டியாக, அதே வடிவம் கொண்ட Threads என்ற செயலியை பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் வியாழன் அன்று அறிமுகப்படுத்தியது. இன்ஸ்டாகிராம் மூலம் இதில் இணைய வகை செய்யப்பட்டுள்ளது.

முதல் நாளே உலகெங்கும் இருந்து 3 கோடி பேர் இதில் கணக்கு தொடங்கி, வரலாறு படைத்துள்ளனர். மேலும், ட்விட்டர் டிரெண்டிங்கில் "த்ரெட்ஸ்" ஹேஷ்டேக் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தது.

எதிர்காலத்தில் பயனாளர்கள் எண்ணிக்கை 100 கோடியை தாண்டும் என்று மெட்டா நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் கூறியுள்ளார்.

த்ரெட்ஸின் அதிரடியால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது ட்விட்டர் நிறுவனம். அசுர வேகத்தில் பயனாளர்களை தன் பக்கம் ஈர்த்து வரும் த்ரெட்ஸ் செயலிக்கு முட்டுக்கட்டை போட முழு வீச்சில் களமிறங்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம்.

ட்விட்டரை போலவே இருக்கும் த்ரெட்ஸ் செயலியில், ட்விட்டரை தழுவி பல அம்சங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ட்விட்டரின் தொழில்நுடப் ரகசியங்களை அறிந்த, ட்விட்டர் நிறுவன முன்னாள் ஊழியர்களை, மெட்டா நிறுவனம் பணியில் அமர்த்தி வருவதாக, ட்விட்டர் குற்றம் சாட்டியுள்ளது.

ட்விட்டரின் சார்பில், அதன் வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பைரோ, மெட்டா நிறுவனர் மார்க் சூகர்பர்க்கிற்கு எழுதிய கடிதத்தில், டிவிட்டரின் தொழில் ரகசியங்களை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதைச் செய்யத் தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை ட்விட்டர் எடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மார்க் சூக்கர்பெர்க் மோசடி செய்திருப்பதாக பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ள எலான் மஸ்க், "போட்டி என்பது நல்லது... ஆனால் மோசடி செய்வது அழகல்ல" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மறுபுறம், Threads நிறுவனத்தின் பொறியியல் குழுவில், ட்விட்டரின் முன்னாள் ஊழியர்கள் யாருமில்லை என்று மெட்டா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

"ப்ளூ-ஸ்கை, மாஸ்டோடன், ட்ரூத்-சோசியல்'' உள்ளிட்ட பல சமூக வலைதள செயலிகள் தற்போது பயன்பாட்டில் இருந்துவந்தாலும், ட்விட்டருக்கு த்ரெட் கொடுப்பது எனனவோ த்ரெட்ஸ் தான்...


Next Story

மேலும் செய்திகள்