மத்திய அரசை மதிக்காத ட்விட்டர்.. லெப்ட் ரைட் வாங்கிய கர்நாடக உயர் நீதிமன்றம் - ஒரே உத்தரவில் ஆடிப்போன மஸ்க்
மத்திய அரசின் உத்தரவை மதிக்காமல் செயல்பட்டதாக ட்விட்டர் நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம். அபராதத்திற்கான காரணம் என்ன ? என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாக் களை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் நடத்திய போராட்டம், கொரோனா காலத்தில் மத்திய அரசு கையாண்ட விதம் தொடர்பாக அரசுக்கு எதிராக ட்விட்டரின் பல ட்வீட்டுகள் இருந்தன. அந்த ட்வீட்டுகளை நீக்க கோரி, ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அரசின் உத்தரவை நிறைவேற்றாமல், அலட்சியம் செய்வதாக ட்விட்டர் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில், பொதுமக்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் மையமாக ட்விட்டர் திகழ்வதாக அந்நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. மேலும் ஊடகங்களில் பரவலாக வந்த தகவல்களையே ட்விட்டரில் பிறர் விவாதித்த தாகவும் வாதங்களை முன் வைத்தனர்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, சிலர் சமூக வலைத்தள பக்கங்களை தவறாக பயன்படுத்தி மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை வேண்டுமென்றே பரப்புவதாகவும், அதனை நீக்க கோரி தான் மத்திய அரசு உத்தரவிட்டதாகவும், ஆனால் 1 வருடமாக அவற்றை ட்விட்டர் நிறுவனம் நீக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், அரசுக்கு எதிராக செயல்படும் சமூக விரோதிகளின் ட்விட்டர் பதிவு மற்றும் கணக்குகளை முடக்கி உத்தரவிட மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்காதது குறித்து உரிய காரணத்தையும் ட்விட்டர் தரப்பில் தெரிவிக்க வில்லை என கூறினார்.
சட்ட திட்டங்கள் அறியாமல் இருக்க, ட்விட்டர் நிறுவனம் ஒன்றும் விவசாயியோ அல்லது சாதாரண மனிதனோ அல்ல, அனைத்தும் அறிந்த கோடிக்கணக்கான மதிப்புடைய நிறுவனம் என சுட்டிக்காட்டினார்.
மேலும் மத்திய அரசு உத்தரவை மதிக்காததால் ட்விட்டர் நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த அபராதத்தை 45 நாட்களுக்குள் கர்நாடக மாநில சட்ட சேவை ஆணையத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், காலக்கெடுவை தாண்டினால் நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.