சென்னை சாலைக்கு திருஷ்டி கழித்த டிராபிக் எஸ்.ஐ. அதிரடி டிரான்ஸ்பர்
சென்னையில் சாலை விபத்துகள் குறைய வேண்டி, பூசணிக்காய் சுற்றி திரிஷ்டி கழித்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மதுரவாயல் பகுதிகளில் அதிக அளவில் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதால், அதனை தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் புதிய முயற்சியாக போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீஸ், அடிக்கடி விபத்து நடைபெறு பகுதிகளில் பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம்பழத்தைக் கொண்டு திருஷ்டி சுற்றி போட்டனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் பழனியை காவல் கட்டுப்பாடு அறைக்கு மாற்றம் செய்து போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், பகுத்தறிவு மற்றும் அறிவியல் முறையில் மட்டுமே விபத்துகளை தடுக்க வேண்டுமே தவிர, போலீசார் தங்கள் தனிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படக்கூடாது என தெரிவித்துள்ளார்.