சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்கள் !! தென்னை துடைப்பம், மண்வெட்டியுடன்.. சாலை விபத்துகளை தவிர்க்க களத்தில் இறங்கிய காவலர்
கரூர் திருக்காம்புலியூர் பைபாஸ் ரவுண்டானா வழியாக கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, தாராபுரம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து பல ஆயிரம் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
அப்பகுதியை சுற்றி ஏராளமான ஜல்லி கற்கள் சிதறி காணப்படுவதால் அவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகனங்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகி வருகிறது. அதே போல்நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனங்களில் செல்பவர்கள் அந்த ஜல்லிக்கற்கள் மீது பயணம் செய்யும் போது பிரேக் பிடித்தால் வாகனம் குடை சாயும் நிலை ஏற்பட்டுள்ளது,
இதை கவனித்த கரூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் புண்ணியமூர்த்தி மற்றும் போக்குவரத்து போலீஸாரும், ரோந்து போலீஸ் ஒருவரும், இளைஞர்கள் 3 பேர் என்று மொத்தம் 7 நபர்கள் விபத்துக்கள் தவிர்க்க, தென்னை துடைப்பம் கொண்டு சாலைகளை கூட்டியும், மண்வெட்டி கொண்டு மணல்களை சுத்தம் செய்தனர்.
இந்த செயலை கண்ட பலரும் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.