இந்திய அணுசக்தி துறையின் தந்தை என்று புகழப்படும் ஹோமி பாபா மறைந்த தினம் இன்று
1909இல் மும்பையில் ஒரு பாரம்பரியமிக்க பார்சி குடும்பத்தில் பிறந்த ஹோமி ஜஹாங்கீர் பாபா, கத்தீட்ரல் அன்ட் ஜான் கானன் பள்ளியில் பயின்றார்.
15 வயதில் பள்ளி இறுதித் தேர்வில் ஹானர்ஸ் பெற்று வென்ற ஹோமி பாபா, மும்பையின் எல்ஃபன்ஸ்டோன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
1927இல் இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் சேர்ந்து, இயந்திரவியலில் பட்டம் பெற்றார்.
பின்னர் காவின்டிஷ் ஆராய்ச்சி கூடத்தில் பணி புரிந்தபடியே, இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
1930களின் தொடக்கத்தில் அணு விஞ்ஞானத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
அணு விஞ்ஞானத்தில் ஆரம்பம் முதல் ஆர்வம் காட்டிய ஹோமி பாபா, 1933இல் அணு விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
காஸ்மிக் கதிர்வீச்சு பற்றி அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைக்காக ஐசக் நியுட்டன் விருதையும், உதவித் தொகையும் பெற்று, தனது ஆராய்ச்சிகளை இங்கிலாந்தில் தொடர்ந்தார்.
1939இல் இந்தியா திரும்பிய ஹோமி பாபா, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில், சர்.சி.வி.ராமனின் வழிகாட்டுதலில், பேராசியராக பணியாற்றினார். அங்கு
காஸ்மிக் கதிர்களுக்கான ஆய்வுக் கூடத்தை நிறுவினார்.
1945இல் மும்பையில் அடிப்படை ஆராய்ச்சிகளுக்கான டாடா நிறுவனத்தை கட்டமைத்தார்.
ஜவகர்லால் நேருவின் நெருங்கிய நண்பரான, ஹோமி பாபா, இந்திய விடுதலைக்கு பின், 1948இல் இந்திய அரசின் அணுசக்தி ஆணையத்தை உருவாக்கி, அதன் தலைவராக சிறப்பாக பணியாற்றினார்.
1954இல் இந்தியாவின் முதல் அணுசக்தி ஆராய்ச்சி திட்டத்தை டிராம்பேயில் தொடங்கினார்.
அவரின் மறைவுக்கு பின்னர், அது பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்திய அரசின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய போது, இஸ்ரோ நிறுவனத்தை விக்ரம் சாராபாய் தலைமையில் தொடங்க ஊக்குவித்தார்.
1962இல் நடந்த இந்திய சீன போருக்கு பின், இந்தியா அணு ஆயுதங்களை தயாரிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார்.
1966இல் ஐரோப்பாவில் பயணம் செய்த போது, விமான விபத்தில் காலமானார்.
இந்திய அணுசக்தித் துறையின் முன்னோடியான ஹோமி பாபா மறைந்த தினம்,1966, ஜனவரி 24.