ரமண மகரிஷி மறைந்த தினம் இன்று... வரலாறு என்ன?
திருவண்ணாமலையில் வாழ்ந்த ஆன்மிக குருவான ரமண மகரிஷி மறைந்த தினம் இன்று
ரமணர் விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் 1879 டிசம்பர் 30ல் சுந்தரம் ஐயர், அழகம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கடராமன். இவர் மதுரையில் ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.
இளம் வயதிலேயே ஆன்மீக நாட்டம் கொண்ட ரமணர், பெரிய புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களை கற்றார். ஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க, அவர் மூலம் திருவண்ணாமலை பற்றிய ஆவல் ரமணருக்கு அதிகரித்தது. மதுரையில், அவரின் 16ஆம் வயதில் மரணத்திற்கு அருகே சென்று மீண்டபின், நான் யார் என்ற கேள்விக்கு விடை தேடத் தொடங்கினார்.
துறவு வாழ்க்கையை மேற்கொண்டு, 17ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி, ரயில் மூலம், 1896ல் திருவண்ணாமலை சென்றடைந்தார். அங்கு திருவண்ணாமலை அருணாச் சலேஸ்வரர் ஆலயத்தில் சிறிது காலம் தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்த பாதாள லிங்கத்தின் அருகில் சென்று தியானத்தில் அமர்ந்தார்.
பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாஸ்ரமம், மாமரக் குகை, குருமூர்த்தம் என பல இடங்களில் வாழ்ந்து, இறுதியில் திருவண்ணாமலை அடிவாரத்தில் தங்கினார். அங்கே பின்னாட்களில் ரமணாசிரமம் உருவானது. ஆதி சங்கரரின் ஆத்ம போதம் என்ற நூலை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.
இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி என்ற சமஸ்கிருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு ரமண மஹரிஷி எனப் பெயர் சூட்டப்பட்டது. அதுவரை அவரை பிராமண சுவாமி என்றே அழைத்தனர்.
அவரின் புகழ் படிப்படியாக தமிழகம் எங்கும் பரவியது. பல்வேறு ஊர்கள், நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அவரை தரிசிக்க திருவண்ணாமலை வந்தனர்.
1949ல், அன்றைய இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி அவரை சந்திக்க திருவண்ணாமலை வந்தார்.
அவரின் கையில் ஏற்பட்ட கொடிய சார்கோமா புற்று நோயால் ஏற்பட்ட கட்டி, மயக்க மருந்து எதுவும் இல்லாத நிலையில், அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. 1950 ஏப்ரல் 14ல், தனது 71ஆம் வயதில் காலமானார். அவரின் சமாதி ரமணர் ஆசிரமத்தில் அமைந்துள்ளது.
திருவண்ணாமலையில் வாழ்ந்த ஆன்மிக குருவான ரமண மகரிஷி மறைந்த தினம் இன்று