இந்தியாவுக்கு ஆதார்.. தமிழகத்துக்கு 'மக்கள் ஐடி'.. தமிழக அரசின் மாஸ்டர் பிளான்
மக்கள் அனைவருக்கும் விரல் ரேகை, கண் கருவிழி ஆகிய உடல்கூறு பதிவுகளுடன் தனி அடையாள எண்ணை வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் யோசனையில் வந்தது ஆதார் எண்..
2010-ல் தனி நபர் அடையாள எண்ணாக அறிமுகம் ஆன ஆதார் எண் வாயிலாக, அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் செயல்படுத்துகிறது மத்திய அரசு...
இந்த வரிசையில் தமிழகத்தில் அனைத்து துறைகளின் சேவைகளையும் வழங்கும் வகையில், மக்களுக்கு மக்கள் ஐடியை வழங்கும் திட்டம் 2013 அதிமுக அரசின் ஆளுநர் உரையில் இடம்பெற்றது.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களுக்கு சேகரிக்கப்படும் பயனாளர் தரவுக்கள், சம்பந்தப்பட்ட துறையால் சேகரிக்கப்படுகிறது. அதாவது பொது விநியோக துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை என தனித்தனியாக தரவுகள் சேமிக்கப்படுகின்றன. இந்த சூழலில்தான் தமிழகத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் தரவுகளைக் கொண்டு, மாநில குடும்பத் தரவு தளத்தை தயார் செய்ய திட்டமிட்டது.
இந்த பணிகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை செய்யவிருக்கிறது. இந்த திட்டத்தில் ஆதார் எண் போன்று ஒவ்வொரு குடிமக்களுக்கும் மக்கள் ஐடியை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மக்கள் ஐடி 10 முதல் 12 இலக்க எண்கள் கொண்டதாக இருக்கும்.