பற்ற வைத்த ஆளுநர்.. டெல்லியில் வெடித்த வெடி.. "தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி" - அரசியலில் அனலை திரட்டிய புது ட்வீட்..!

பற்ற வைத்த ஆளுநர்.. டெல்லியில் வெடித்த வெடி.. தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி - அரசியலில் அனலை திரட்டிய புது ட்வீட்..!
x

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் நீண்ட நாள் பனிப்போர் நிகழ்ந்து வந்தது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேரடி மோதலாக வெடித்தது. ஆளுநர் உரையில் சில பத்திகளையும் வார்த்தைகளையும் வாசிப்பதை ஆளுநர் தவிர்த்தார். உடனே அதற்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்ததும், அதன்பின் நடந்த சம்பவங்களையும் தமிழ்நாடே அறியும்.

இதற்கு நடுவே ஆளுநரை உரை வாசிக்கவிடாமல் திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள், கண்டன முழக்கங்களை எழுப்பினர். இச்சம்பவத்திற்கு ஊற்றுக்கண், ஆளுநர் எழுப்பிய "தமிழ்நாடு - தமிழகம்" விவாதம் தான். "தமிழ்நாடு என்பது பாரதத்தின் (நாட்டின்) அடையாளம். ஆகவே தமிழ்நாட்டை தமிழகம் என அழைப்பதே சரி" என்று அவர் சொன்னது பூதாகரமாக வெடித்தது. திமுக கூட்டணி அல்லாத அரசியல் கட்சிகளே ஆளுநரை கடுமையாக விமர்சித்தனர்.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் முன்பை விட தமிழ்நாடு என்ற சொல் மீண்டும் ஒருமுறை பெரும் பேசும்பொருளாகியுள்ளது. இந்தியளவில் டிரெண்ட் அடித்தது. ஆனாலும் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாத ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதையும் அரசு சின்னத்தையும் தவிர்த்ததும், முதலமைச்சர் அந்த விழாவை புறக்கணித்ததும் தனிக்கதை.


இச்சூழலில், திமுக எம்எல்ஏ ஜெ.கருணாநிதி போட்ட ட்வீட் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. அவர் தன் ட்விட்டரில், கர்நாடகாவிற்கென தனி மாநில கொடி இருக்கும்போது, தமிழ்நாட்டிற்கென ஏன் இருக்க கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. 1970ஆம் ஆண்டிலிருந்தே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தனிக்கொடி கோரிக்கையை முன்வைத்தார். (ட்வீட்டை பார்க்க கீழே லிங்கை சொடுக்கவும்)

https://twitter.com/JkarunanithiMLA/status/1615325170385969153

2023ஆம் ஆண்டில் இன்று அவர் பெயர் கொண்ட திமுக எம்எல்ஏ அதே கோரிக்கையை எழுப்பியிருப்பது அரசியல் களத்தில் அனலை திரட்டியுள்ளது. இதனிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எம்பி டிஆர் பாலு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட திமுக குழு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து புகார் மனுவை அளித்தது. அந்த புகார் மனுவை மத்திய உள்துறைக்கு குடியரசு தலைவர் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் தான் ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது




Next Story

மேலும் செய்திகள்