அமைச்சர் பெயரில் கையெழுத்து போட்டு முறைகேடு - 10 லட்சம் ரூபாய் மோசடி
திருப்பத்தூரில், அமைச்சர் மா. சுப்பிரமணியம் கையெழுத்திட்டதாக கூறி, போலி பணி நியமன ஆணை வழங்கி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் தேவலாபுரம் பகுதியை சேர்ந்த ஹேமலதா என்பவர், நர்சிங் படித்துவிட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இவரது உறவினரான வாணியம்பாடி பகுதியை சேர்ந்த சிவகுமார் மற்றும் அருண்குமார் ஆகியோர் ஜெய்லாபுதீன் என்ற நபரை ஹேமலதாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.
அப்போது 15 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால், அரசு வேலை வாங்கித் தருவதாக ஜெய்லாபுதின் கூறியதை நம்பி, ஹேமலதா பல தவணைகளாக 10 லட்சம் ரூபாய் வரை வழங்கியுள்ளார். ஆனால், 6 மாதங்களுக்கு மேலாகியும் வேலை வாங்கித் தராமல் அலைக்கழித்துள்ளனர்.
இந்த நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியம் கையெழுத்திட்டது போல் ஒரு பணி ஆணையை ஹேமலதாவின் வாட்ஸ் அப்பிற்கு, அந்த மூவரும் அனுப்பியுள்ளனர்.
அதனைக் கொண்டு அருகாமையில் உள்ள மருத்துவ அலுவலரிடம் காண்பித்தபோது, அது போலி பணி நியமன ஆணை என தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.