"இன்னும் 1 வருஷம் தான் டைம்"... சீனாவை மிரள விடும் இந்தியா - வெளியான பரபரப்பு ரிப்போர்ட்..!
ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அமைப்பு- யுஎன்டிபி, உலக மக்கள் தொகை குறித்து கடந்த ஜூலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதன்படி, 12 ஆண்டுகளில் 100 கோடி மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது.
அதாவது, 2010ல் 700 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை, 2022ல் 800 கோடி யாக அதிகரித்திருக்கிறது.
இதற்கு முன்னரும், இதேபோல உலக மக்கள்தொகை நூறு கோடியைத் தொடுவதற்கு 12 ஆண்டுகள் ஆகியுள்ளன.
அதாவது,1998ல் உலக மக்கள் தொகை 600 கோடியாக இருந்தது. பல ஆண்டுகளாக, எத்தனையோ இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்தபோதும், மக்கள்தொகை அதிகரிப்பில் பெரிய மாற்றம் இல்லை.
காரணம், ஆயுள் கால நீட்டிப்பு, பொது சுகாதாரம், சத்துணவு மேம்பாடு, மகப்பேறு கால இறப்பு, பச்சிளம் குழந்தை இறப்பு, நோய்கள் ஆகியவை குறைக்கப்பட்டது ஆகியவற்றை முக்கியமாகக் குறிப்பிடுகின்றனர்.
கொரோனா பெருந்தொற்றால் உலக அளவில் 1.6 கோடி முதல் 2.8 கோடிபேர் வரை இறந்திருக்கக்கூடும் என்பது தி எகானா மிஸ்ட் ஆய்விதழின் கணக்கீடு. உயிரிழப்புகள் அதிகரித்த போதும், உலக மக்கள்தொகை வளர்ச்சியில் சரிவு இல்லை.
1963ஆம் ஆண்டில் மக்கள்தொகை அதிகரிப்பு வீதம் 2.3 சதவீதம். நடப்பு ஆண்டிலோ அது 0.8சதவீதமாகக் குறைந்திருக்கிறது.
1950களில் இருந்து இதுதான் மிகவும் குறைவு. 2037ஆம் ஆண்டில் 900 கோடியாகவும், 2080 முதல் 2100 காலகட்டத்தில் 1040 கோடியாகவும் உலக மக்கள் தொகை அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
1990-2000, மற்றும் 2000-2010 என இரண்டு பத்தாண்டு களிலும் மக்கள்தொகை கணிசமான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
ஆனால் அப்போது பிறந்தவர்கள் இப்போது குழந்தையைப் பெற்றெடுக்கும் கட்டத்தில் வந்தநிலையில், மகப்பேறு அளவு குறைந்துள்ளது.
1990களில் 3.3 ஆக இருந்த சராசரி மகப்பேறு, இப்போது 2.3 ஆகக் குறைந்திருக்கிறது.
2050ஆம் ஆண்டுக்குள் எட்டு நாடுகளில் அதிகமான மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது.
இதில் ஆப்பிரிக்காவில் மட்டும் காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா, தான்சானியா ஆகிய ஐந்து நாடுகள் இடம்பெற்றுள்ளன.
மற்றவை, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய ஆசிய நாடுகள் என்றும் கணக்கிடப் பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, அடுத்த ஆண்டில் சீனாவை விஞ்சி, உலகின் அதிக மக்கள்தொகை நாடாக மாறவுள்ளது குறிப்பிடத்தக்கது.