"கட்சியில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம்" - தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்
கட்சியில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம் என்றும், உரிய நேரத்தில் அங்கீகரிக்கப்படும் என்றும், தி.மு.க இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளராக 4 ஆண்டுகளை நிறைவு செய்து, 5ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சியடைவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேர்காணலுக்குப் பிறகு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிதான் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டதாகவும், நேர்காணலை மட்டும் வைத்து முடிவு செய்யாமல், அவர்களின் களப்பணிகளையும், துணைச் செயலாளர்களின் உதவியுடன் கேட்டறிந்து விவாதித்து, ஒவ்வொரு முடிவையும் பார்த்துப் பார்த்து எடுத்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விண்ணப்பித்த 4,158 நபர்களிலிருந்து 609 பேர் தேர்வாகி, இளைஞர் அணியின் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம் என்றும், கட்சிப்பணிகள் உரிய நேரத்தில் அங்கீகரிக்கப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். புத்துணர்ச்சி சற்றும் குறைந்திடாமல் பணிகளைத் தொடர்ந்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.