திருமணமான பெண்ணுடன் ஊர் சுற்ற சொந்த கடையில் கைவரிசை.. தம்பியை கம்பி எண்ணவைத்த அண்ணன்
காதலியுடன் ஊர் சுற்றுவதற்காக, குடும்பத்துக்கு சொந்தமான நகைக்கடையிலேயே கைவரிசை காட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஓட்டேரி பட்டாளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் யோகேஷ் ஜெயின் மற்றும் வினோத் ஜெயின். இவர்கள் குடும்பத்துக்கு சொந்தமான தங்க நகைக்கடை சவுகார்பேட்டையில் உள்ளது. வழக்கம்போல கடந்த 3ம் தேதி கடையை யோகேஷ் ஜெயின் திறந்து பார்த்தபோது, கடையிலிருந்த ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போனது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், யோகேஷ் ஜெயினின் சகோதரர் வினோத் ஜெயின், பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், பெங்களூருவில் ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றி வந்த வினோத் ஜெயினை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் மீட்டனர். பின்னர் வினோத்திடம் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலம் சிமோகாவை சேர்ந்த திருமணம் ஆன பெண்ணுடன் ஊர் சுற்றுவதற்காக குடும்பத்துக்கு சொந்தமான நகைக்கடையிலேயே கைவரிசை காட்டிவிட்டியது தெரியவந்தது.