PS2-க்கு டிக்கெட் தர மறுத்த தியேட்டர் மேனேஜர் - ஆத்திரத்தில் மண்டையை உடைத்த இளைஞர்கள் - சாத்தான்குளத்தில் அதிர்ச்சி..!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் பொன்னியின் செல்வன் படத்திற்கு டிக்கெட் இல்லை என கூறியதால், மது போதையில் இருந்த இளைஞர்கள், தியேட்டர் மேலாளரைத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாத்தான்குளத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு பொன்னியின் செல்வன் - 2 மதிய காட்சி பார்ப்பதற்கு, சொகுசு காரில் போதையில் வந்த இளைஞர்கள், தியேட்டர் ஊழியர்களிடம் டிக்கெட் கேட்டுள்ளனர். படம் திரையிட்டு அரை மணி நேரம் கடந்துவிட்டதால், டிக்கெட் வழங்க இயலாது என ஊழியர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால், தியேட்டர் ஊழியர்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, அங்கு வந்த தியேட்டர் மேலாளர் முத்துவேல் அவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது, அந்த இளைஞர்கள், முத்துவேலை கீழே தள்ளிவிட்டு செங்கலால் அவரது தலையில் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில், பலத்த காயம் அடைந்த முத்துவேல், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.