போதையில் ஆற்றில் குழந்தையோடு விழுந்த இளைஞர்..! பலியான குழந்தை..! நடவடிக்கை எடுக்காத போலீஸ்..!
மதுபோதையில் குழந்தையுடன் ஆற்றில் இளைஞர் தவறி விழுந்த நிலையில், குழந்தை உயிரிழந்தது. சம்பந்தப்பட்ட இளைஞரைக் கைது செய்ய வலியுறுத்தி நடத்தப்பட்ட சாலை மறியலால் பரபரப்பு நிலவியது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள மாதா கோயில் தெருவை சேர்ந்த பிரிடிக்ஸ் சாம்சன் என்பவர் கடந்த 19ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 2 வயது குழந்தை ரோஜருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்... வீரசோழன் ஆற்றுக்கட்டு கரையில் உள்ள மதுபான கடையில் மது அருந்தி விட்டு இரவில் திரும்பிய போது, பைக், குழந்தையுடன் இளைஞர் ஆற்றுக்குள் விழுந்தார். சிறிது நேரத்தில் சாம்சன் மட்டும் கரையேறிய நிலையில், குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. இச்சம்பவம் நிகழ்ந்து 4 நாட்கள் ஆகியும், சாம்சன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்று குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் இன்று திருவிடைமருதூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் திடீரென கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.