வாட்ஸ் அப்பில் இருந்த இளமையான DP... மணிக்கணக்கில் பேசி மயக்கிய மாயக்குரல் - ஃபில்டரை பார்த்து லட்சங்களை பறிகொடுத்த '90ஸ் கிட்'

x

இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர், வாட்ஸ் அப்பில் இளமையாக இருப்பது போல் டிபி வைத்தும், திருமணமானதை மறைத்தும் முகநூலில் ஒருவரை ஏமாற்றி 14 லட்ச ரூபாய் மோசடி செய்திருக்கிறார்... இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

மோசடி செய்றது தான் டார்கெட் என கிளம்பிய பெண் ஒருவர், என்னவெல்லாம் தகிடுதத்தம் செய்வார்? என நமக்கு காட்டிய சினிமா படங்கள் ஏராளம்...

ஆனால் ஃபில்டரில் போட்டோ ஒன்றை எடுத்து அதை வாட்ஸ் அப்பில் ப்ரொபைல் படமாக வைத்து ஏதோ உலக அழகி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து 90ஸ் கிட்ஸ் ஒருவருக்கு அல்வா கொடுத்திருக்கிறார் ஒரு பெண்...

பேருதான் கல்யாண சுந்தரம்.. ஆனா இன்னும் கல்யாணம் ஆகல என வடிவேலு பட சீன் போல திருமணமாகாமல் ஏங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தன் பணத்தையும் திருமணம் என்ற பெயரில் தன் வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு பரிதவித்துக் கொண்டிருக்கிறார்...

சென்னை, தாம்பரம் அருகே புது பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். 40 வயதான இவர், சென்னை அரசு மருத்துவமனையில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார்....

இவருக்கு மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 35 வயதான சரண்யா என்பவருடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில், ஹாய், சாப்டியா? போன்ற டெம்ப்ளேட் ரக உரையாடல்கள் ஒரு கட்டத்தில் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறது...

இதில், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் இளமையாக இருப்பது போல் சரண்யா வைத்திருந்த டிபியை பார்த்து மயங்கிய நாகராஜூக்கு அப்போது தெரியவில்லை சரண்யாவுக்கு ஏற்கெனவே திருமணமானது என்று...

சரண்யாவும் தனக்கு திருமணமானதை மறைத்து தொடர்ந்து நன்கு பேசி வந்த நிலையில், அவரின் மாயக்குரலில் மெய்மறந்து போன நாகராஜூக்கு விபூதியுடன் மிளகாய் பொடியையும் சேர்த்து அடித்திருக்கிறார் சரண்யா ...

தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, என திருமணம் செய்வது போல் பேச்சை துவக்கிய சரண்யா பின்னர் நாகராஜிடம் பணம் கறக்க ஆரம்பித்திருக்கிறார்...

சரண்யாவின் வீட்டு வாடகை, மருத்துவ செலவு, சொந்த செலவு என்று அவர் கேட்கும் போதெல்லாம் கூகுள் பேயில் பணத்தை வாரி கொடுத்திருக்கிறார் நாகராஜ்...

இது எந்த அளவு சென்றிருக்கிறது என்றால், வங்கியில் கடன் வாங்கி நாகராஜ் செலவு செய்யும் அளவுக்கு சென்றிருக்கிறது...

இவ்வாறு, நாகராஜிடம் இருந்து சிறுக சிறுக சுமார் 14 லட்ச ரூபாய் பணத்தை சரண்யா பெற்றதாக கூறப்படுகிறது... ஒரு கட்டத்தில் பணப் பிரச்சினையிலும், கடன் பிரச்சினையிலும் சிக்கிய நாகராஜ் தான் கொடுத்த பணத்தில் கொஞ்சம் திரும்ப கேட்டிருக்கிறார்...

இதனால், நாகராஜ் அலர்ட் ஆனதாக எண்ணிய சரண்யா, அவரிடம் பழகுவதை கொஞ்சமாக கொஞ்சமாக நிறுத்தி, ஒரு கட்டத்தில் செல்போன், முகநூல், வாட்ஸ் அப் என அனைத்திலும் நாகராஜை ப்ளாக் செய்திருக்கிறார்...

இதனால், அதிர்ச்சியடைந்த நாகராஜ் குற்றப்பிரிவு போலீசாரிடம் நடந்தவற்றையெல்லாம் கூறி புகாரளித்திருக்கிறார்...

புகாரின் அடிப்படையில், சரண்யாவினுடைய செல்போனை சிக்னலை வைத்து அவரை தேடி வந்த போலீசார், சரண்யாவை கைது செய்தனர்..

விசாரணையில், அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த நாகராஜ், தான் கொடுத்த 14 லட்சத்தையும் சரண்யா ஸ்விகி, ஜொமேட்டோவில் சாப்பாடு வாங்கியே காலி செய்ததாக அவர் கூறியதை கேட்டு பேரதிர்ச்சி அடைந்தார்...

இதையடுத்து, சரண்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.... ஏமாற்றுபவர்கள் என்னதான் காதல் வலை விரித்தாலும், சிக்காமல் நழுவிக் கொண்டால் பணமும் பத்திரமாக இருக்கும், இப்படி சிக்கி அல்லாட வேண்டியதில்லை என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்...


Next Story

மேலும் செய்திகள்