சிறுவனுக்காக கலவரக் காடாக மாறி அணுஅணுவாய் அழியும் உலகின் அழகிய நகரம் - உலகை உலுக்கு பாரிஸ் பயங்கரம்
பிரான்சில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்டதால், நாடே கலவரக்காடாக மாறியுள்ளது. பிரான்சில் மக்கள் கொந்தளிக்க என்ன காரணம், அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் போக்குவரத்து சோதனையின் போது நஹேல் என்ற ஆப்பிரிக்கா வம்சாவளியை சேர்ந்த சிறுவனை போக்குவரத்து போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இந்த ஒற்றை சம்பவம் தான் ஒட்டுமொத்த பாரிசை கொதித்தெழ செய்தது. வீதிகளில் போராட்டத்தில் இறங்கிய மக்கள், போலீசாருக்கு எதிராக கண்டன முழக்கங்களை முழங்க தொடங்கினர்.
சிறுவன் நஹேல் போக்குவரத்து விதிமீறலுக்காக சுட்டுக்கொல்லப்படவில்லை, ஒரு கருப்பின சிறுவனாக இருந்து போக்குவரத்து விதிகளை மீறியதாலேயே போலீசார் மனிதநேயமற்ற முறையில் சுட்டு கொன்றதாக மக்கள் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் குதித்தனர்.
இரவு பகலாக தொடரும் போராட்டத்தில் கடைகள் நொறுக்கப்பட்டு, வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, பொருட்கள் சூறையாடப்பட்டன. மக்கள் போராட்டத்தால் ஸ்தம்பித்து போன பிரான்ஸ் அரசு,பாரிசில் ஊரடங்கு பிறப்பித்து, பொது போக்குவரத்துகளையும் முடக்கியது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்த நிலையில், போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
போராட்டத்தை கைவிட்டு அமைதியை நிலை நாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோன், சமூக வலைத்தளங்களில் பரவும் பொய் செய்திகளால் வன்முறை தூண்டப்படுவதாக சாடினார்.
14 முதல் 16 வயதான இளம் வயதினரே போராட்டங்களில் ஈடுபடுவதால், பெற்றோர்கள் பதின்ம வயது பிள்ளைகளை வெளியே அனுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தங்கள் போராட்டம் அரசுக்கோ அல்லது காவல்துறைக்கோ எதிரானது அல்ல,..அதிகார துஷ்பிரயோகம், இனப்பிரிவின வாதம் போன்ற அநீதியிழைக்கும் செயல்களால், பொறுமை இழந்த மக்களின் கோபத்தின் வெளிபாடு தான் என கனத்த இதயத்துடன் தெரிவித்துள்ளனர் போராட்டக்காரர்கள்.
கலவரங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க, சிறுவன் நஹேலின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பார்த்து பார்த்து வளர்த்த மகனை பிரிந்த துயரில் பேசிய தாய் மவ்னியா, தன் மகன் அரபு நாட்டை சேர்ந்தவர் போல இருப்பதால் தான் சுட்டுக்கொல்லப்பட்டான் என கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
பிரான்சில் இது போன்ற புரட்சி போராட்டங்கள் புதிதல்ல, இதே போல் 2005ம் ஆண்டு இரண்டு சிறுவர்கள் போலீசாரின் அதிகார துஷ்பிரயோகத்தால் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு, உலகையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் பிரான்சில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வழிவகுத்தது.
இதன் பின் 2007ம் ஆண்டு, விசாரணைக்காக அழைத்து சென்றவரை போலீசார் சரமாரியாக தாக்கியதில் அவர் மூச்சித்திணறி உயிரிழந்தார். இதே போல் 2017ல் 69 வயதான முதியவரும் போலீசாரின் அலட்சியப்போக்கான செயலால் போலீசார் வாகனத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
2020ல் வாகனம் ஓட்டி சென்ற போது செல்போன் பயன்படுத்தியதாக கூறி, உணவு டெலிவரி செய்யும் ஊழியரை விரட்டி பிடித்து போலீசார் காட்டு மிராண்டி தனமாக நடந்து கொண்டதில், டெலிவரி ஊழியர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
இது போன்ற சம்பவங்களுக்கு எதிராக பிரான்சில் பலமுறை போராட்டங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அனைத்து போராட்டங்களும் இனி மற்றுமொரு உயிர் பிரிந்து விடக்கூடாது என்பதை வலியுறுத்ததான்.