உலகின் முதல் அணுகுண்டு அமெரிக்காவின் நியு மெக்சிகோவில் சோதனை... 25,000 டன் TNTக்கு ஈடான சக்தி வெளிபாடு- நாசி ஜெர்மனியுடன் போட்டியிட்ட அமெரிக்கா
உலகின் முதல் அணு குண்டு சோதனை நடத்தப்பட்ட தினம் இன்று. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கிறது.
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணு குண்டுகள் வீசி, போரை முடிவுக்கு கொண்டு வந்தது.
இதற்கு முன்பு மிக ரகசியமான முறையில், நியு மெக்சிகோ மாகாணத்தின் பாலைவனப் பகுதியில், முதல் அணுகுண்டு தயாரிக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது.
1939ல் இரண்டாம் உலகப் போரை தொடங்கிய ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிடல்ர், மொத்த ஐரோப்பாவையும் கைபற்ற முயன்றார்.
பாசிச பாணி சர்வாதிகார ஆட்சியை, தான் கைபற்றிய நாடுகளில் நிலைநாட்டி, உலகையே அச்சுறுத்தினார். ஜெர்மனியில் அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்தையும் தொடங்கினார்.
நாசி ஜெர்மனியில் இருந்து தப்பிச் சென்ற விஞ்ஞானிகள் பலரும் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தனர். அவர்களில் புகழ்பெற்ற இயற்பியலாளாரான ஐன்ஸ்டினும் ஒருவர்.
ஹிட்லரின் அணு ஆயுத உற்பத்தி திட்டத்தை பற்றி இவர்கள் மூலம் அறிந்த அமெரிக்க அரசு அதிர்ச்சி யடைந்தது. ஜெர்மனிக்கு முன்பாக அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய முடிவு செய்து, ஒப்பென்ஹெய்மர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவை அமைத்தது. மான்ஹட்டன் திட்டம் என்று இதற்கு பெயரிடப்பட்டது.
அமெரிக்கா முழுவதும் 30 இடங்களில் பல்வேறு பாகங்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. யுரேனியம் 235 மற்றும் புளோட்டோனியம் ஆகிய மூலப் பொருட்களை பிரித்தெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்திற்கு மொத்தம் 2,400 கோடி டாலர் செலவானது. 1945 ஜூலை 16ல், நியு மெக்சிகோவின் ஜார்னாடா பாலைவனத்தில், பூமிக்கு அடியே முதல் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 25 ஆயிரம் டன் டி.என்.டி வெடிப்பொருளுக்கு ஈடான சக்தி இதில் இருந்து வெளிப்பட்டது.
ஆனால் இதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஜெர்மனி சரணடைந்து விட்டது. ஜெர்மனியின் கூட்டளியான ஜப்பான் தொடர்ந்து போரிட்டு வந்ததால், அதை சரணடையச் செய்ய, ஜப்பான் மீது இரண்டு அணு குண்டுகளை அமெரிக்கா வீசி, பேரழிவை ஏற்படுத்தியது.
உலகின் முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட தினம், 1945 ஜூலை 16.