செல்போனை தொலைத்த மனைவி..கட்டி பிடித்து பழி வாங்க துடித்த கணவன்..ஒரே தோட்டாவில் நடந்த ட்விஸ்ட்..!
உத்திரபிரேதசத்தில் மனைவியை கொல்ல திட்டமிட்ட கணவர், அவரை அரவணைத்த படியே பின்பக்கவாட்டில் இருந்து துப்பாக்கியால் சுட்டபோது, தோட்டா இருவரது உடலிலும் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அப்படி என்னதான் நடந்தது பார்க்கலாம் விரிவாக..
உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதியான மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி அனேக் பால் மற்றும் சுமன் பால். இவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் என நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகளை உறவினர் அரவணைப்பில் இருக்க விட்டு, இருவரும் சண்டிகரில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது...
சண்டிகரில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்த இருவரும், சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த கிராமமான மொராதாபாத்திற்கு வந்திருக்கின்றனர்...
வந்த நாளில் இருந்து இருவரும் சண்டையிட்டு கொண்டேதான் இருந்ததாகவும், அந்த சண்டைக்கு காரணம் ஒரு செல்போன்தான் எனவும் கூறப்படுகிறது....
இருவரும் ஒன்றாக திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளனர். அப்போது மனைவி சுமன் பாலிடம் செல்போனை வைத்திருக்கும் படி அனேக் பால் கொடுத்திருக்கிறார்... திருமண நிகழ்ச்சியில், கவனம் முழுவதும் நிகழ்ச்சியில் இருந்ததாலும், கூட்ட நெரிசலாலும் கையில் வைத்திருந்த செல்போனை தொலைத்திருக்கிறார் சுமன் பால்....
இதனால், அதிர்ச்சியடைந்த அவர், கணவர் அனேக்பாலிடம் தெரிவித்த போது, ஆத்திரத்தில் மனைவியை திட்டி தீர்த்திருக்கிறார் அனேக் பால்...
இந்நிலையில்தான் இருவரும் சொந்த கிராமத்திற்கு வந்த நிலையில், வீட்டினுள் சண்டையிட்டு கொண்டுள்ளனர்... இதில், சம்பவத்தன்று சினிமாவில் வரும் சைக்கோ கில்லரை போல, திடீரென மனைவியிடம் நன்கு பாசத்துடன் பேசி பழகிய அனேக் பால், பூஜை அறையில் சென்று சாமி படத்தின் முன்பு வழிபாடு செய்துள்ளார்...
கணவரின் நடவடிக்கையை புரிந்து கொள்ள முடியாமலும், அவரது மனநிலையை அறிந்து கொள்ளமுடியாமலும் நின்று கொண்டிருந்திருக்கிறார் சுமன் பால்.
அப்போது, அவரது அருகில் வந்த அனேக் பால் மனைவியை கட்டி அரவணைத்த நிலையில், தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை கையிலெடுத்த அவர், பின்பக்கவாட்டில் இருந்து மனைவியை சுட, அந்த தோட்டா சினிமாவின் கிளைமேக்ஸை மிஞ்சும் அளவுக்கு இருவர் மீதும் பாய்ந்து அவர்களது உயிரை பறித்துள்ளது...
தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரது உடலையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒரு தினக்கூலியின் கையில் நாட்டுத் துப்பாக்கி வந்தது எப்படி ?... உண்மையிலே மனைவி செல்போனை தொலைத்ததனால் ஏற்பட்ட தகராறில்தான் விபரீதமா ? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.