நாடே எதிர்பார்க்கும் ராகுல் காந்தி வழக்கின் தீர்ப்பு.. தப்புமா எம்பி பதவி?

x

பரபரப்பான சூழலுக்கு இடையில், ராகுல் காந்தியின் மீதான அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது, குஜராத் நீதிமன்றம்... அது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு....

ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு தகுதி நீக்க வழக்கு, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஒட்டுமொத்த நாடுமே அவதூறு வழக்கின் மீதான தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை எதிர்நோக்கியிருக்கிறது.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, "எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று விமர்சித்தார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திடீரென பிரச்னை வெடித்தெழுந்தது. தொடர்ந்து, குஜராத் பாஜக எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி என்பவர், மோடி சமூகத்தை ராகுல் காந்தி அவதூறாக பேசி விட்டார் என்று கூறி சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், கடந்த மார்ச் 23-ம் தேதி ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்ததுடன் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இந்த தீர்ப்பை யாருமே எதிர்பார்க்கவில்லை. நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். தீர்ப்புக்கு எதிரான குரல்கள் நாடு முழுவதும் எதிரொலிக்க துவங்கியது. அடுத்த கட்டமாக, ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து நீக்கப்படுவதாக மக்களவைச் செயலகம் அறிவித்தது.

இந்த நிலையில்தான், பலத்த பாதுகாப்புக்கு இடையே, கடந்த ஏப்ரல் 3-ம் தேதி சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு வருகை தந்து, தன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து சென்றார். கூடவே தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒரு மனுவும், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும்வரை, குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி ஒரு மனு என, இரண்டு மனுக்கள் தாக்கல் செய்தார்.

இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது. தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்திலும் ராகுல் காந்தி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வெளியாகவுள்ளது. தீர்ப்பு ராகுல் காந்திக்கு சாதகமாக வந்தால் அவரால் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட முடியும். தீர்ப்பு எதிராக வந்தால், இரண்டு ஆண்டுகள் தண்டனை பெறுவதோடு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் இழப்பார் ராகுல்காந்தி. இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் இந்த வழக்கின் தீர்ப்பு, எதுவாக இருந்தாலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில், தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.


Next Story

மேலும் செய்திகள்