நீருக்கடியில் செல்லும் மெட்ரோ...அடுத்தாண்டு உருவாகும் பிரமாண்டம்
இந்தியாவில் முதன்முறையாக தண்ணீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை இன்னும் 1 ஆண்டு காலத்தில் நிறைவடைந்து விடும் என கொல்கத்தா மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டிலேயே முதன்முதலாக தண்ணீருக்கடியில் செல்லும் வகையில் மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்த கல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் பணிகளை மேற்கொண்டுள்ளது. ஹூக்ளி நதிக்குள்ளே ஹவ்ரா மற்றும் கல்கத்தா ஆகிய 2 நகரங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவையானது மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாகவும் வரும் 2023 டிசம்பர் மாதம் நிறைவடைந்து விடும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு 120 கோடி ரூபாய் என்ற வீதத்தில் நடைபெற்று வந்த இந்த பணிகள் தற்பொழுது, கிலோமீட்டருக்கு 157 கோடி ரூபாய் என்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது முதல் கட்டமாக சுமார் 520 மீட்டர் நீளமுள்ள சுரங்கம் ஹூக்ளி நதிக்கு உள்ளே கட்டப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பெருமளவில் பலன் அளிக்கும் வகையில் இந்த மெட்ரோ ரயில் சேவை இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.