கல்வி சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த சோகம்.. நீரில் மூழ்கி 12ம் வகுப்பு மாணவன் பலி...
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில், கல்வி சுற்றுலா சென்ற இடத்தில், தனியார் பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில், தனியார் பள்ளியில் பயிலும் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள், கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஆழியார் பகுதிக்கு கல்வி சுற்றுலா சென்றனர். ஆழியார் அணையின் கீழ் பகுதியில் உள்ள தடுப்பணையில் மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், திடீரென புதை மணலுடன் கூடிய ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு, சிகிச்சைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி மாணவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆழியார் தடுப்பணையில் அரசால் தடை செய்யப்பட்ட பகுதியில், பள்ளி மாணவர்களை குளிக்க அனுமதித்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், மெத்தன போக்கில் செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், உயிரிழந்த மாணவனின் உறவினர்கள், காவல்நிலையத்தை முற்றுகையிடட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.