பல்லை பிடுங்கிய விவகாரம்..பரபரப்பை கிளப்பும் மருத்துவ அறிக்கை - குவிந்து கொண்டே போகும் புகார்கள்

x

அம்பையில் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவரின் மருத்துவ அறிக்கை வெளியாகி அவர்களுக்கு நடந்த கொடூரத்தை பதிவு செய்திருக்கிறது... அதனை விரிவாக பார்ப்போம்...

விசாரணை என அழைத்துச் சென்றவர்களின் பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மீதான குற்றச்சாட்டுகள் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இந்த விவகாரத்தில் நாள்தோறும் செய்திகள் வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து நிற்கிறது...

பாப்பாக்குடி காவல் நிலையத்தில் வைத்து ஏஎஸ்பி எங்களை தாக்கினார் என திடீரென வந்து அதிர்ச்சி கொடுத்தவர்களால் நெல்லை மாவட்டமே அதிர்ந்து போயுள்ளது.

அதன் தொடர்ச்சியாக விகே புரம் பகுதியில் இருந்து மீண்டும் ஒரு புகார் எழுந்துள்ளது.

அதாவது, கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி, வி.கே. புரம் பகுதியில் நடந்த அடிதடி வழக்கில், அருண்குமார் உட்பட சிலரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

விசாரணை முடிந்து காவல்நிலையத்தில் வெளியே வந்த அருண்குமார் மற்றும் அவரின் 17 வயது சகோதரர் இருவரும் ரத்த காயத்துடன் திரும்பியுள்ளனர்.

அருண்குமார் மற்றும் அவரது சகோதரர், பல் சிகிச்சைக்காக காவல்கிணறு பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த 31ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்போது, பல் மருத்துவமனையில் அருண்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ஆவணங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஆவணத்தில் அருண்குமாருக்கு முன் பல் சேதம் ஆகியுள்ளதுடன், மேல் தாடையில் இடது பக்கம் இரண்டாவது பல் மற்றும் கீழ் தாடையில் 3 பற்கள் உடைந்தது என மொத்தமாக 7 பற்கள் சேதம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ அறிக்கையால், இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.

ஒரு பக்கம் மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த, மறுபக்கம் சார் ஆட்சியர் விசாரணை முடிவடைந்த நிலையில், சிறப்பு விசாரணை அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவை நியமித்தது தமிழக அரசு.

கடந்த திங்கட்கிழமை, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா, விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் அளிக்க வராததால், அவர் சென்னை திரும்பினார்.

இந்தநிலையில், வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், ஐஏஎஸ் அதிகாரி அமுதா, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விசாரணை நடத்த உள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் நேரிலோ அல்லது மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலமாகவோ புகார் அளிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது, நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் புகார் அதிகரித்து வரும் சூழலில், ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கு முக்கிய கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்