தன் மூளையில் ஓட்டை போட்டு சிப்பை சொருகிய வினோத மனிதர்! நினைத்து பார்க்க முடியாத விபரீத சம்பவம் - நடந்தது என்ன?
மனிதர்களுக்கு தூக்கத்தில் வரும் கனவுகளை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சிக்காக, தனது மூளைக்குள் துளையிட்டு எலக்ட்ரானிக் சிப்பை பொருத்திய நபர் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
மனிதர்களுக்கு தூக்கத்தில் வரும் கனவுகளை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியுமா என்ற வினோத சிந்தனை, ரஷ்யாவில் வசித்து வரும் 40 வயதான மிக்கேல் ரடுகா என்ற நபருக்கு தோன்றியுள்ளது.
இதன் விளைவாக, மூளைக்குள் துளையிட்டு சிலிக்கான் சிப் ஒன்றை பொருத்தி விநோத முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இந்த வினோத மனிதர்.
இவர் மனிதர்களுக்கு ஏற்படும் உறக்கம் மற்றும் பக்கவாதம் குறித்த ஆராய்ச்சிக்காக, "பேஸ் ஆராய்ச்சி மையத்தை" தொடங்கி நடத்தி வருகிறார்.
இவர் முறையாக மருத்துவம் பயிலாத நிலையில், தூக்கம், கனவு குறித்து பல வீடியோக்களை வெளியிட்டு ஏராளமான பார்வையாளர்களை கவர்ந்து வந்துள்ளார்.
இவரது வீடியோக்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தனது ஆராய்ச்சியில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக எண்ணியுள்ளார்.
அந்த வகையில், மூளைக்குள் சிப் பொருத்தி அதில் மின்சார சிக்னல்களை அனுப்பி கனவில் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா என்ற வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளார்.
இதற்காக, கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் துளையிடும் இயந்திரத்தின் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
ஆனால், இதனால் ஏற்பட்ட விளைவோ பயங்கரம், அவரது தலையில் இருந்து பீறிட்டுக் கொண்டு வெளியேறிய ரத்தத்தை அவரால் நிறுத்த முடியவில்லை.
சுயநினைவை இழந்து, உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது தெரிந்திருந்தும் ஆபத்தான சிகிச்சையை அவர் தொடர்ந்துள்ளார்.
கிட்டத்தட்ட 4 மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையின் முடிவில், தனது மூளைக்குள் எலக்ட்ரானிக் சிப்பை வெற்றிகரமாக செலுத்திவிட்டார்.
இந்நிலையில், அதன் பின் மருத்துவமனைக்கு சென்ற அவர் மருத்துவர்களிடம் நடந்தவற்றை விளக்கியுள்ளார்.. யூடியூபில் உள்ள வீடியோக்களை பார்த்துவிட்டு மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் தான் சொந்தமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
பின்னர், மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, மூளைக்குள் மாட்டப்பட்டிருந்த சிப்பை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
தற்போது நலமுடன் இருக்கும் மிக்கேல் ரடுகா, "மனிதர்களுக்கு ஏற்படும் கனவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிக்கு, தன்னுடைய முதல் முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளதாக" ட்விட்டரில் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்