போலீஸ்-ன்னு கெத்து காட்ட டீ மாஸ்டரை பளார் பளார்னு கன்னத்தில் அறைந்த SSI... ஆடி போன முதியவர்.. சிசிடிவி வெச்ச ஆப்பு

x

சிதம்பரத்தில், கடைக்குள் புகுந்து டீ மாஸ்டரான முதியவரை சரமாரியாக தாக்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடையில் புகுந்து முதியவரை தாக்கியதுடன், தட்டிக்கேட்ட கடை உரிமையாளரையும் போலீஸ் மிரட்டிய சம்பவம், சிதம்பரம் பேருந்து நிலையத்தில் அரங்கேறியுள்ளது.

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் கூத்தன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், உணவகம் மற்றும் இனிப்பு கடை நடத்தி வருகிறார்.

இவரது கடையில் 67 வயதான முருகேசன் என்பவர், டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.

முருகேசனுக்கும், பக்கத்து கடையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

முதியவர் அடிக்கடி தொந்தரவு செய்து வருவதாக, அந்தப் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரிடம் பக்கத்து கடையை சேர்ந்த பெண் கூறியுள்ளார்.

அதற்கு அந்த ஆட்டோ ஓட்டுநர், போலீசே எங்க கிட்ட இருக்குனு சொல்லி முதியவரை மிரட்டியதாகவும், அதற்கு அந்த முதியவர் போலீஸ கையில வைச்சிருந்த பெரிய ஆளா என கேட்டதாகவும் கூறப்படுகிறது.

சிதம்பரம் பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராஜசேகரிடம், போலீஸ கையில வைச்சிருந்த பெரிய ஆளானு முதியவர் கேட்பதாக, எதிர்தரப்பு, எஸ்எஸ்ஐயை ஏத்தி விட்டதாக கூறப்படுகிறது.

அதனைக் கேட்டு பொங்கி எழுந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன், விறுவிறுவென அந்த டீ கடைக்கு வந்து, அங்கு டீ ஆத்திக்கொண்டு இருந்த முதியவரின் கன்னத்தில் பளார் பளார் என அறைந்தார்.

போலீஸ கையில வெச்சிருந்த பெரிய ஆளானு கேட்குற என கூறியபடி, முதியவரை ராஜசேகரன் சரமாரியாக தாக்கியதுடன், சட்டையை பிடித்துக்கொண்டு தரதரவென கடையில் இருந்தும் இழுத்துச் சென்ற காட்சி வேதனை அளித்தது.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் மணிகண்டன், எதற்காக கடையில் புகுந்து அடிக்கிறீர்கள்? பெரியவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் குடும்பத்திற்கு யார் பதில் சொல்வது? என கேட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த சிறப்பு உதவி காவல் உதவி ஆய்வாளர், மணிகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தொழிலே செய்ய முடியாது பார்த்துக்கோனு, அவரை அடிக்க பாய்ந்து, தனது வீரத்தை காட்டினார்....

மேலும், முதியவரை தாக்கியதை நியாயப்படுத்தவும், அவருக்கு ஆதரவாக பேசவும், பக்கத்து கடைக்காரர்கள் ஒவ்வொருவரையும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் அழைத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதுமட்டுமல்லாமல், முதியவர் செல்போன் திருடியதாக பேசிய ராஜசேகரன், செல்போன் திருடனை எப்படி வேலைக்கு சேர்த்த? திருட்டு செல்போன்களை வாங்கி விக்கிறேனு, உன்ன உள்ள தள்ளிடுவேனு சொல்லி, டீக்கடை உரிமையாளர் மணிகண்டனை மிரட்டும் தோனியில் பேசினார்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமிற்கு, பாதிக்கப்பட்ட மணிகண்டன் அனுப்பியதாகவும், அதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராஜசேகரன் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான முதியவர் கடை உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

67 வயது முதியவரை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் தாக்கி மிரட்டும் காட்சி, மற்ற காவலர்களுக்கு அவப்பேரை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்