காதலியை மணக்க அம்மாவை விட்டு ஓடிய மகன் - நடுரோட்டில் தாயை காலால் மிதித்த பெண்வீட்டார்
கள்ளக்குறிச்சி அருகே காதலர்கள் மாயமான விவகாரத்தில், இருவரும் திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படம் கிடைத்ததால், இளைஞரின் தாயை பெண் வீட்டார் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கராபுரம் அருகேயுள்ள கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா. இவர் அதே கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் மாற்று சமூகம் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார் இருவரையும் கண்டித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காதலியுடன் சூர்யா தலைமறைவானது பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், இருவரையும் பெண் வீட்டார் தேடி வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படங்கள் பெண் வீட்டாருக்கு கிடைத்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், சூர்யாவின் தாயுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை அடித்து தர தரவென இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காட்சிகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், பெண் வீட்டார் ஐந்து பேர் மீது வழக்குபதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.