8 வயது சிறுமி உயிரை பறித்த ஸ்மார்ட்போன்.. வெடித்த மாடல் குறித்து வெளியான தகவல்
ஆசையாக செல்போனை கையில் வைத்து வீடியோ பார்த்துக் கொண்டிருந்த சிறுமியின் உயிரை அதே செல்போன் காவு வாங்கியிருக்கும் சோகம் கேரள மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது...
நம் கையில் இருக்கும் அதி பயங்கர ஆயுதம் என்றால் அது செல்போன் தான் என சொல்லும் அளவுக்கு ஆபத்துகளை வரவைத்துக் கொண்டிருக்கிறது..
அதிலும் இந்த கால பிள்ளைகளின் நேரத்தை அதிகம் எடுத்துக் கொண்டிருப்பதும் இந்த செல்போன்கள் தான்.
கையில் செல்போன் இருந்தால் தான் சாப்பிடுவேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது தான் பெரும் சவால்...
இப்படியாக எல்லாமே செல்போன் என மாறிவிட்ட சூழலில் 8 வயது சிறுமியின் உயிரை அநியாயமாக காவு வாங்கியிருக்கிறது செல்போன்...
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருவில்வமலை பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரின் மகள் தான் ஆதித்யஸ்ரீ. 3ஆம் வகுப்பு படித்து வந்த இந்த சிறுமியின் கையில் எப்போதும் இருப்பது செல்போன் தான்...
செல்போனில் வீடியோக்களை பார்ப்பதில் அதிக நேரம் செலவிட்டு வந்திருக்கிறார் அவர். அதிலும் விடுமுறை நாட்கள் என்பதால் செல்போன் தான் அவருக்கு எல்லாமுமாக இருந்திருக்கிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறார் ஆதித்யஸ்ரீ. அப்போது திடீரென கையில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியிருக்கிறது.
இதில் தீக்காயமடைந்த சிறுமி ஆதித்யஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகளின் சடலத்தை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர்.
உடனடியாக தகவல் அறிந்த போலீசார், தடயவியல் அதிகாரிகளோடு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் வெடிக்க என்ன காரணம்? மின் கசிவு காரணமாக ஏற்பட்ட விபத்தால் இது நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே சிறுமி பயன்படுத்தியது ரெட்மி 5 ப்ரோ மாடல் போன் என விசாரணையில் தெரியவந்திருக்கிறது. செல்போனை அவர் சார்ஜரில் போட்டு பயன்படுத்தவில்லை என்பது உறுதியாகி இருக்கும் நிலையில் அதிகம் சூடாகி போன் வெடித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
வெடித்த செல்போனின் பேட்டரி வளைந்த நிலையில் காணப்பட்டதாகவும் தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.