நாடாளுமன்றத்தில் வைக்கவுள்ள செங்கோல்.. இதற்கு பின்னணியில் ரகசிய கடிதம்- உத்தரவிட்ட பிரதமர் மோடி
1947-ல் நாடு சுதந்திரம் பெற்ற போது திருவாவடுதுறை ஆதீனம் பிரதமர் நேருவிடம் வழங்கிய செங்கோல் புதிய நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வைக்கப்படுகிறது.நாடாளுமன்றத்தில் தமிழக பெருமையை பரைசாற்றவிருக்கும் செங்கோல் குறித்து, விரிவாக விளக்கமளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பின்னணியில் பிரதமர் மோடிக்கு வந்த கடிதம் ஆய்வுக்கு வித்திட்டதாக குறிப்பிட்டார்.
ஆம், பிரதமர் மோடிக்கு செங்கோல் குறித்து கடிதம் எழுதியவர் பிரபல நடன கலைஞர் டாக்டர் பத்மா சுப்பிரமணியம்.... வரலாற்றில் மறைக்கப்பட்டு, மக்களுக்கு தெரிவிக்கப்படாத செங்கோல் வரலாற்றை 75 ஆவது சுதந்திர தினத்தில் மக்களுக்கு தெரிவிக்க கோரி பிரதமர் மோடிக்கு பத்மா சுப்பிரமணியம் 2021-ல் கடிதம் எழுதினார். அவரிடம் பேசிய போது, செங்கோலுக்கு முக்கியத்துவம் கொடுக்க கோரியே எழுதியதாக தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன்படி கலாச்சார அமைச்சக குழு, இந்திரா காந்தி தேசிய கலை மைய ஆராய்ச்சியாளர்கள் விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள். செங்கோலை தேடியபோது பிரயாக்ராஜ் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது. அதனை ஆய்வு செய்த போது திருவாவடுதுறை ஆதினம் வழங்கியது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்தே நாடாளுமன்ற மக்களவையில் செங்கோல் வைக்கப்படுகிறது.இது குறித்து பேசிய பத்மா சுப்பிரமணியம், தமிழகத்திற்கு கிடைத்த பெருமை பூரிக்கச் செய்வதாக குறிப்பிட்டார்.பிரதமர் மோடிக்கும், ஆய்வு குழுவுக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும் பத்மா சுப்பிரமணியம் குறிப்பிட்டார். நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு பத்மா சுப்பிரமணியத் திற்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனை மகிழ்ச்சியாக ஏற்றிருக்கும் பத்மா சுப்பிரமணியன், விழாவில் பங்கேற்பதை தன் வாழ்நாளின் முக்கியமான தருணமாக பார்ப்பதாக நெகிழ்ந்தார்.